சென்னை:அயப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் 12வது மாணவர் தலைமை ஏற்பு விழா 2023இல் தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டு தலைமை பொறுப்பேற்றார். அதன் பின்னர் மாணவர்களுக்கு பதக்கங்களை வழங்கி பதவி ஏற்பு செய்து வைத்தார். அதைத் தொடர்ந்து மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கண்டு களித்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், "உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டு வருகை வரவேற்கத்தக்கது. அவர் தமிழ்நாடு வருவது அரசியல் ரீதியான வருகை அல்ல. முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் இல்லத்திற்குச் சென்று நூல் வெளியிட்டு உள்ளார். அப்துல் கலாம் இல்லத்திற்கு நமது உள்துறை அமைச்சர் செல்வது நமக்கு பெருமை.
அப்துல் கலாம் இரண்டாவது முறை நம் நாட்டிற்கு குடியரசுத் தலைவராக வந்திருக்க வேண்டும். ஆனால், சில அரசியல் சூழ்ச்சிகள் காரணமாக அவர் மீண்டும் குடியரசுத் தலைவர் பதவிக்கு வர முடியவில்லை. தமிழ்நாட்டில் உள்ள சில அரசியல் காரணத்தால், தமிழர்கள் அவருக்கு ஆதரிக்காததால் மீண்டும் அவர் குடியரசுத் தலைவராக முடியவில்லை என்பதை மறுக்க முடியாது.