தமிழ்நாடு மேலிடப்பொறுப்பாளர் முரளிதர ராவ் தலைமையில் சென்னை பாஜக அலுவலகத்தில் மாநில மையக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களை தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை சந்தித்தார். அப்போது, நீட் தேர்வு முடிவுகளால் உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்தினருக்கு தனது வருத்தத்தை பகிர்ந்துகொண்டார். நீட் தேர்வுக்கு பிறகு மருத்துவ சேர்க்கைக்கான இடங்கள் தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
நீட் தேர்வில் உள்ள நல்ல விஷயங்கள் குறித்து பேசாமல் எதிர்க்கட்சிகள் மாணவர்கள் மத்தியில் அவநம்பிக்கையை விதைப்பதாக குற்றம்சாட்டிய தமிழிசை, நீட் தேர்வை எப்படி ஸ்டாலின் நீக்குவார்? என கேள்வி எழுப்பினார்.
கஸ்தூரி ரங்கன் பரிந்துரையில் மும்மொழிக் கொள்கையில் மூன்றாம் மொழி குறித்து அந்தந்த மாநிலங்களே முடிவு செய்துகொள்ளலாம் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது என தெளிவுபடுத்திய தமிழிசை, இது கணினி காலம் என்பதால் மாணவர்களின் நலனுக்காகவே மும்மொழிக்கொள்கை பரிந்துரைக்கப்பட்டது என திட்டவட்டமாக தெரிவித்தார்.