தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழரின் தொன்மையானது வெளிச்சம் பெற்றுக்கொண்டே இருக்கப்போகிறது - முதலமைச்சர் பெருமிதம் - தமிழ் விழா

இந்திய அளவில் எடுக்கப்பட்ட ஆய்வுகளின்படி காலத்தால் முந்தியது மயிலாடும்பாறையாக உள்ளது, இவ்வாறு ஒவ்வொரு ஆய்வாக வர, வர தமிழரின் தொன்மையானது வெளிச்சம் பெற்றுக்கொண்டே இருக்கப் போகிறதாக வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை மாநாட்டில் காணொலி வாயிலாக கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஆய்வுகளின் மூலம் தமிழரின் தொன்மையானது வெளிச்சம் பெற்றுக் கொண்டே இருக்க போகிறது
ஆய்வுகளின் மூலம் தமிழரின் தொன்மையானது வெளிச்சம் பெற்றுக் கொண்டே இருக்க போகிறது

By

Published : Jul 2, 2023, 6:44 PM IST

Updated : Jul 2, 2023, 8:29 PM IST

அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை:வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை மாநாட்டில் (FeTNA)அமைப்புடன் இணைந்து தமிழ்நாடு அரசின் MSME துறையின் கீழ் இயங்கக்கூடிய டான்சிம் (TANSIM) நிறுவனம், சாக்ரமெண்டோ தமிழ் மன்றமும் இணைந்து நடத்தும் தமிழ் விழாவில் காணொலி வாயிலாக மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலியில் பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், திருவாரூரில் கலைஞர் கோட்டம் திறந்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கூரிய அவர் இவற்றையெல்லாம் காண்பதற்கு அனைவரும் தமிழ்நாட்டிற்கு வருமாறு இருகரம் கூப்பி அழைத்தார்.

தாய்த் தமிழ்நாட்டின் மீது பற்றும் திராவிட மாடல் நல்லாட்சியின் மீது நம்பிக்கையும் கொண்டு தனக்கு இந்த விழாவில் பங்கேற்று உரையாற்ற வாய்ப்பளித்ததற்காக நன்றி கூறிய அவர் பேசியதாவது,

தமிழ்நாட்டின் புதுயுக தொழில் முனைவுகள் : 'உலகெங்கும் வாழும் முதலீடு செய்யும் சக்தி படைத்த தமிழர்கள், நம் தமிழ்நாட்டில் செயல்படும் புத்தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்யும் வாய்ப்பு மட்டுமல்லாது, அவர்களுக்கு வழிகாட்டியாக செயல்பட வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டது. இந்த முன்னெடுப்பின் முதல் கட்டமாக “அமெரிக்கத் தமிழ் நிதியம்”என்ற அமெரிக்க வாழ் தமிழர்களால் தொடங்கப்பட்ட அமைப்பு மூலமாக 10 கோடி ரூபாய் அளவுக்கு தமிழ்நாட்டின் தொடக்க நிலை புத்தொழில் நிறுவனங்களுக்கான முதலீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

தமிழ்நாட்டின் புதுயுகத் தொழில் முனைவுகளில் உலகெங்கும் வாழும் தமிழர்கள் பங்குபெற அது ஊக்கமளிப்பதாக அமைந்தது. அந்தவகையில் ஃபெட்னா அமைப்பானது கூடிக் கலையும் அமைப்பாக இல்லாமல், கூடி உழைக்கும் அமைப்பாக செயல்பட்டு வருவதை அனைவரும் அறிவோம். இத்தகைய ஃபெட்னா அமைப்பும், சாக்ரமெண்டோ தமிழ் மன்றமும் இணைந்து நடத்தும் தமிழ் விழாவுக்கு வருகை தந்துள்ள உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

தமிழ் மொழி நமக்கு எழுத்தாக அல்லாமல் ரத்தமாக இருக்கிறது:அமெரிக்கவாழ் தமிழர்கள் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்களும் இம்மாநாட்டில் கூடியிருக்கிறீர்கள். தமிழ்நாட்டில் இருந்தும் ஏராளமானவர்கள் அங்கு வந்திருப்பதாக நான் அறிகிறேன். அந்தவகையில், உலகத் தமிழ்ச் சங்கமமாக இந்த மாநாடு அமைந்திருக்கிறது.

இது தமிழ் விழா! தமிழ் எப்போதும் வாழவே வைக்கும்! வாழ வைத்துக்கொண்டு இருக்கிறது. தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடினார். தமிழ் என்பது நமக்கு மொழியாக மட்டுமல்லாமல் அமுதமாக, உயிராக நம்மை வாழ்விக்கும் மண்ணாக, இனிமை தரும் மணமாக, இளமைக்கு மருந்தாக, போராட்டக் களத்துக்கு வாளாக இருக்கிறது. அதனால் தான், தமிழ் என்றால் நாம் உணர்ச்சி வசப்படுகிறோம். இனமான உணர்ச்சி அடைகிறோம். மொழியின் பெயரை தனது பெயராக வைத்துக் கொள்வதில் முன்னோடி இனம் நாம்தான்.

தமிழ்ச்செல்வன், தமிழரசன், தமிழ்ச்செல்வி என்று பெயர்வைத்துக் கொண்டவர்கள் 18 வயதுக்குமேல், சுமார் 3 லட்சத்து 75 ஆயிரம் பேர் இருக்கின்றனர் என்று ஐ.ஏ.எஸ். அதிகாரி பாலகிருஷ்ணன் கணக்கிட்டுச் சொல்லி இருக்கின்றார். குழந்தைகளின் பெயரையும் சேர்த்தால் இது இன்னும் அதிகமாகும்.

மொழிக்காக தம் தேக்கு மர தேகத்தை தீக்கிரையாகக் கொடுத்த இனத்தைச் சேர்ந்தவர்கள் நாம். கடல் கடந்து வந்த பிறகும் – தாய்மொழிக்காக விழா எடுத்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால், மொழி என்பது நம்மைப் பொறுத்தவரையில் எழுத்தாக இல்லை, ரத்தமாக இருக்கிறது. அந்த உணர்வோடுதான் நாம் கூடி இருக்கிறோம்.

இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறு, இனி தமிழ் நிலத்தில் இருந்துதான் எழுதப்பட வேண்டும்: 'தொன்மை தமிழரின் பெருமை' என்ற தலைப்பில் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருக்கிறீர்கள். உலகம் தோன்றியதைக் கணிக்க முடியாதது மாதிரி தமிழின் தோற்றத்தையும், தமிழினத்தின் தோற்றத்தையும், கணிக்க முடியாத அளவுக்குத் தொன்மையான வரலாறு நமக்கு உண்டு.

இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டுக்கு 1968ஆம் ஆண்டு உலகம் முழுவதும் இருந்து அறிஞர்கள் வருகை தந்திருக்கின்றனர். அவர்களிடம் அன்றைய முதலமைச்சர் அண்ணா “சென்ற காலத்தைச் சிந்தை செய்யும்போது உண்மையான ஒரு பெருமித உணர்ச்சியையும், வருங்காலத்தை எண்ணும் போது இடையறாத ஒரு நம்பிக்கையையும், இன்றைய இன்னல்களுக்கு இடையிலும், தமிழர்களின் உள்ளத்திலே, இவ்விழாவின் நிகழ்ச்சிகள் ஏற்றி வைத்திருக்கும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. வரலாற்றுக் காலத்திற்கு முன்பு தொட்டு, வளமார் பண்பாடும், உயர் நாகரிகமும் மலிந்த ஒரு நாட்டில் இத்தகைய வெற்றியினை நாம் எதிர்பார்த்தல் இயல்பானதே" என்றார் அண்ணா.

அதனால் தான் ’இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறு, இனி தமிழ் நிலத்தில் இருந்துதான் எழுதப்பட வேண்டும்’ என்ற முழக்கத்தை முன்னெடுத்துச் செயல்பட்டு வருகிறோம். கழக ஆட்சி அமைந்ததும், பல்வேறு ஆய்வுகளை நாம் மேற்கொண்டு வருகிறோம். தமிழ்நாட்டில் பொது ஊழிக்கு, முன் 6-ஆம் நூற்றாண்டிலேயே நகரமயமாக்கம் ஏற்பட்டிருந்தது என்பதும், படிப்பறிவும், எழுத்தறிவும் பெற்ற மேம்பட்ட சமூகமாக நாம் விளங்கினோம் என்பதையும் கீழடி அகழாய்வு நிலை நிறுத்தியுள்ளது.

காலத்தால் முந்தியது மயிலாடும்பாறை:சிவகளையில் முதுமக்கள் தாழியில் கண்டெடுக்கப்பட்ட உமி நீங்கிய நெல்மணிகளின் காலம் பொது ஊழிக்கு முன் 1155 என கண்டறியப்பட்டுள்ளது. 'தண்பொருநை’ என்று அழைக்கப்பட்ட தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம் 3200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது அறிவியல்பூர்வ ஆய்வுகளின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்திலுள்ள கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களான கொந்தகை, அகரம், மணலூர், தூத்துக்குடி மாவட்டத்தில் சிவகளை, அரியலூர் மாவட்டத்தில் கங்கைகொண்ட சோழபுரம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மயிலாடும்பாறை, விருதுநகர் மாவட்டத்தில் வெம்பக்கோட்டை, திருநெல்வேலி மாவட்டத்தில் துலுக்கர்பட்டி, தர்மபுரி மாவட்டத்தில் பெரும்பாலை ஆகிய ஏழு இடங்களில் விரிவான ஆய்வுகள் நடந்து வருகிறது.

கீழடிக்கு அருகில் அகரம் அகழாய்வுத் தளத்தில் சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகளை ஆய்வு செய்தபோது அங்கே நெல்மணிகள் பயிரிடப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்திருக்கின்றன. சிவகளை வாழ்விடப் பகுதியில் சேகரிக்கப்பட்ட மண்மாதிரிகளை ஆய்வு செய்ததில் அங்கே நீர் செல்லும் செங்கல் வடிகாலில் நன்னீர் சென்றுள்ளதும் தேக்கி வைக்கப்பட்ட நீர் நிலையில் இருந்து இந்நீர் கொண்டு வரப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், மயிலாடும்பாறையில் கிடைத்த பொருளானது பொது ஊழிக்கு முன் 1615ஆம் ஆண்டுக்கும், பொது ஊழிக்கு முன் 2172-ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்டது என காலக்கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் இரும்பின் பயன்பாடு 4200 ஆண்டுகளுக்கு முன்பிருந்தது எனக் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்திய அளவில் செய்யப்பட்ட ஆய்வுகளின்படி, காலத்தால் முந்தியது மயிலாடும்பாறைதான். இப்படி ஒவ்வொரு ஆய்வாக வர, வர தமிழரின் தொன்மையானது வெளிச்சம் பெற்றுக்கொண்டே இருக்கப் போகிறது.

தமிழர்களின் பண்பாட்டுப் பெருமை:கடந்த ஏப்ரல் மாதம் ஐ.ஏ.எஸ். அதிகாரி பாலகிருஷ்ணனின் "ஒரு பண்பாட்டின் பயணம்" என்ற நூல் வெளியீட்டு விழாவில் நான் கலந்துகொண்டேன். அது புத்தகம் அல்ல, தமிழர்களின் பண்பாட்டுக் கருவூலம்! "சிந்துப் பண்பாடு என்பது 5000 ஆண்டுகள் பழமையானது – அங்கு வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய மொழி, தமிழ்மொழி. வாழ்ந்த மக்கள் சங்ககாலத் தமிழரின் மூதாதையர்" – என்பதை அவர் நிறுவி இருக்கிறார்.

இன்றைக்கும் நமது பயன்பாட்டில் இருக்கும் கொற்கை, வஞ்சி, தொண்டி, ஊர், பட்டி, பள்ளி, காவேரி, பாண்டியன், குமரன், மதுரை, வன்னி, வேல் ஆகிய சொற்கள் எல்லாம் சிந்துப் பண்பாட்டு வெளியான குஜராத், மராட்டியம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய இடங்களில் இருக்கிறது என்பதை அவர் நிறுவி இருக்கிறார்.

தொல்லியல் ஆய்வுகளில் தமிழ்நாடு அரசின் பங்கு:தமிழர்களின் பண்பாட்டுப் பெருமை இது. சிந்துவெளியில் 'காளைகள்'தான் இருந்தன. இது திராவிடச் சின்னம்! சிந்துவெளி முதல் இன்றைய அலங்காநல்லூர் வரை காளைகள் இருக்கின்றன. இவை அனைத்தும் தமிழரின் தொன்மையை பறைசாற்றுவதாக அமைந்துள்ளன. தமிழ்நாடு அரசு, தொல்லியல் ஆய்வுகளுக்கு ஊக்கமளிக்கும் அரசாக அமைந்துள்ளது.

இந்த ஆய்வுகள் அனைத்தையும் உலக ஆய்வாளர்களின் அளவுகோலுடன் மெய்ப்பித்து –அவர்களை ஏற்றுக் கொள்ள வைத்து வெளியிடும் அரசாக அமைந்துள்ளது. இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாற்றை முழுமையாக அறிந்து கொள்வதில் உள்ள இடைவெளிகளை நிரப்பும் ஆராய்ச்சிகளை தமிழ்நாடு அரசு முன்னெடுக்கும்.

இந்தியாவிலேயே, அதிகப்படியான கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது தமிழ்நாட்டில் தான். அதிலும், வைகையைச் சுற்றித்தான். தமிழர்களின் பண்பாட்டின் முக்கியத்துவம் மற்றும் தொன்மையை நிரூபிக்கவும், அதை உலகளவில் கொண்டு செல்லவும் அரசு திட்டமிட்டுள்ளது. "தமிழர் அல்லது தமிழ்நாட்டார் முன்னேற்ற வினையை ஒல்லும் வகையால் சொல்லும் வாயெல்லாம் செய்து வருவது திமுக அரசே" – என்று 1971-இல் திமுக அரசு குறித்து எழுதினார் 'திராவிட மொழிநூல் ஞாயிறு' தேவ நேயப்பாவாணர் . அப்படிப் பாராட்டும் அரசாக இன்றைய திமுக அரசும் செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டின் பெருமைகளான அருங்காட்சியகங்களை காண வரவும்! :கீழடி அகழாய்வில் 1000-க்கும் மேற்பட்ட குறியீடுகளும், 60-க்கும் மேற்பட்ட தமிழி எழுத்துப் பொறிப்பு கொண்ட பானை ஓடுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பானை ஓடுகளில் குவிரன், ஆதன் போன்ற தனி நபர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இதன்வாயிலாக சமுதாயத்தின் பல்வேறு பிரிவினரும் கல்வியறிவு பெற்றிருந்தனர் என்பது வெளிப்படுகிறது.

கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல் பொருட்களை உலகத் தமிழர்களும், பொதுமக்களும் கண்டுகளிக்கும் வகையில் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் 31,000 சதுர அடி பரப்பளவில் 18 கோடியே 43 லட்சம் ரூபாய் செலவில் 'கீழடி அருங்காட்சியகம்' தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டுள்ளது.

அடுத்து, திருநெல்வேலியில், பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. திருவாரூரில், கலைஞர் கோட்டம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் காண்பதற்கு நீங்கள் அனைவரும் தமிழ்நாட்டிற்கு வரவேண்டும் என்று இருகரம் கூப்பி அழைக்கிறேன். பார் முழுதும் சென்று கொடி நாட்டிய தமிழினத்தின் வேர் அறிய வாரீர்! சீர்மிகு தமிழ்நாட்டின் சிறப்பறிய வாரீர்! சாதி, மதப்பாகுபாடு பாரோம்! அமிழ் தமிழுக்குச் சொந்தக்காரர்கள் அனைவரும் ஓரினம் என்ற உயரிய பண்பாட்டைக் கொண்டு வாழ்வோம்'' எனப் பேசினார்.

இதையும் படிங்க: மேகதாதுவில் அணை கட்டும் முயற்சி... திமுக எதிர்ப்புத் தெரிவிக்காதது ஏன் - ஈபிஎஸ் கண்டனம்!

Last Updated : Jul 2, 2023, 8:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details