சென்னை: "எதிர்காலத்தில் தமிழர் பிரதமராவதை உறுதிப்படுத்த வேண்டும்" இந்த கருத்தைக் கூறியவர் மத்திய அமைச்சர் அமித் ஷா. கூறிய இடம் தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம். அமித்ஷாவின் இந்த பேச்சில் பல விஷயங்களை அவர் மேற்கோள் காட்டியிருக்கிறார். கோவிலம்பாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தான் இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த ஆலோசனையில், தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதியின் சக்திகேந்திர பொறுப்பாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள், மண்டல் தலைவர்கள் பங்கேற்றனர்.
பாஜகவைப் பொறுத்தவரையிலும் 2019 தேர்தலுக்கு முன்னதாகவே தமிழ்நாட்டின் 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் சக்தி கேந்திர பொறுப்பாளர்களை பாஜக நியமித்திருந்தது. ஒவ்வொரு தொகுதியிலும் 5 வாக்குச்சாவடிகள் சக்தி கேந்திரம் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. 30 வாக்குச்சாவடிகள் கொண்ட தொகுப்பு மகா சக்தி கேந்திரமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சக்தி கேந்திரங்களில் உயர்மட்ட தலைவர்கள் கூட பொறுப்பாளராக இருப்பார். அதாவது பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும், தனது தொகுதிக்குட்பட்ட சக்தி கேந்திரத்தின் பொறுப்பாளர்களில் ஒருவராக இருப்பார். இந்த நிர்வாகிகளை ஊக்கப்படுத்தும் விதமாக அமித் ஷா பேசியது தான், தற்போதைய லேட்டஸ்ட் பரபரப்புக்கு காரணம். தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்தும் முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்த அமித்ஷா, வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராவது தான் தமிழ்நாடு பாஜகவின் இலக்கு என கூறினார்.
“வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 25 தொகுதிகளில் பாஜக வெற்றிபெற இலக்கு நிர்ணயிக்க வேண்டும். பாஜக அரசின் 9 ஆண்டு கால ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். வெற்றிபெறும் எம்.பிக்கள் மத்திய அமைச்சராக்கப்படுவார்கள் என கூறிய அமித் ஷா , இதற்கெல்லாம் உசசமாக , வருங்காலங்களில் தமிழரை பிரதமராக்க முயற்சிப்போம். ” என கூறினார்.
தமிழகத்தைப் பொறுத்தவரையிலும் அதிமுக பாஜக கூட்டணி தற்போது வரையிலும் தொடர்கிறது. இதில் வெளிப்படையான மோதல்கள் ஏதும் இல்லாத சூழலிலும், தமிழகத்தில் பாஜக 25 தொகுதிகளில் வெற்றிபெற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என அமித்ஷா பேசியது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாஜக 9 தொகுதிகளில் பணியாற்றி வருவதாகவும், அதில் பாஜக வெற்றிபெறும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்திருந்தார். இதில், தென்சென்னை, கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம், சிவகங்கை, ஈரோடு, வேலூர் ஆகிய 9 தொகுதிகளை பாஜக குறி வைப்பதாக பேசப்பட்டது. ஆனால், அமைப்பு ரீதியாக அவர் அவர் கட்சியை பலப்படுத்துவது இயல்புதான் எனவும் தமிழகத்தில் கூட்டணியை பொறுத்தவரையில் அதிமுகதான் இறுதி செய்யும் எனவும் அதிமுக தலைவர்கள் தெரிவித்திருந்தனர்.
சுமார் 6 மாதத்திற்கு முன்பு தமிழகத்தில் 25 தொகுதிகளில் பாஜக வெற்றிபெறும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார். பாஜகவை பொறுத்தவரை மாநில தலைமையால் கூட்டணி குறித்தும், தொகுதிப்பங்கீடு குறித்தும் முடிவெடுக்க முடியாது எனவும் இது அண்ணாமலையின் தனிப்பட்ட கருத்து எனவும் அதிமுக தலைவர்கள் தெரிவித்திருந்தனர்.
தமிழகத்தில் தென் சென்னை தொகுதியில் பாஜகவினர் கடந்த சில ஆண்டுகளாகவே தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றனர். தென் சென்னை என்பது அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மகன் ஜெயவர்த்தன் 2014ஆம் ஆண்டு வெற்றியும், கடந்த முறை தோல்வியடைந்த தொகுதி ஆகும். இந்த முறை தென் சென்னை தொகுதியில் ஜெயவர்த்தன் போட்டியிடுவார் என்று பேசப்பட்ட நிலையில் அந்த தொகுதியை பாஜக குறி வைத்துள்ளது.
இது குறித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “தமிழகத்தை பொறுத்தவரையில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமையும். தென் சென்னை தொகுதியில் பாஜக களப்பணியாற்றுவது தவறில்லை. இன்னும் நாடாளுமன்ற தேர்தலுக்கு நேரம் இருக்கிறது. தன்னுடைய கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காக அமித்ஷா அப்படி பேசி இருக்கிறார். தொகுதி பங்கீடு, எந்தெந்த தொகுதி என்பது இறுதி நேரத்தில் முடிவு செய்யப்படும். இது தொகுதி பங்கீட்டு குழு மூலம் கூட்டணி கட்சி தலைவர்களுடன் கலந்து ஆலோசிக்க வேண்டிய விவகாரம்” என கூறினார்.
தமிழகத்தில் 25 தொகுதிகளில் வெற்றிபெறுவோம் என அமித்ஷா கூறியது குறித்தும், தமிழகத்தில் அமித்ஷாவின் வியூகம் என்ன என்பது குறித்தும் மாநில பாஜகவின் இரண்டாம் கட்ட தலைவர் ஒருவரிடம் விசாரிக்கும் போது, “தமிழகத்தில் மெகா கூட்டணி அமைக்க பாஜக முயற்சி செய்து வருகிறது. தற்போது அதிமுக-பாஜக கூட்டணி தொடர்கிறது.
ஆனால் பாஜக விரும்புவது ஒருங்கிணைந்த அதிமுக. ஆனால், அதற்கு எடப்பாடி பழனிச்சாமி மறுப்பு தெரிவிக்கிறார். இதனால், பாஜக தலைமையில் மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் எங்களுடைய டெல்லி மேலிட பாஜக தலைவர்கள் இறங்கியுள்ளனர். மேலும், தமிழகத்தின் ராமநாதபுரத்தில் இந்த முறை பிரதமர் மோடியை போட்டியிட வைப்பதற்கான முயற்சியும் நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.
இது குறித்து பேசிய மூத்த பத்திரிகையாளர் பாபு ஜெயக்குமார், “தமிழகத்தில் 25 தொகுதிகளில் வெற்றிபெறுவோம் என்று அமித்ஷா கூறியதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. பாஜக தலைவர்கள் கூறுவது ஒன்றாக இருக்கும், நடந்தது ஒன்றாக இருக்கும். எப்படியாவது தமிழகத்தில் இருந்து ஒருசில எம்.பிக்களை அனுப்பிவிட மாட்டோமா? என்று பாஜகவினர் செயல்பட்டு வருகின்றனர். திமுகவிற்கு எதிரான ஒரு பிம்பத்தை கட்டமைக்க இது போன்று அமித்ஷா பேசியுள்ளார். அதிமுக-பாஜக கூட்டணி தொடர்வதால் அமித்ஷா கூறிய விவகாரத்தை அதிமுக தலைவர்கள் கடந்து செல்வார்கள். இதனால் அதிமுக-பாஜக கூட்டணிக்குள் பாதிப்பு ஏற்படாது” என கூறினார்.
இதையும் படிங்க:பாஜக ஆட்சியில் தான் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது! அமித்ஷா பேச்சுக்கு டி.ஆர்.பாலு பதிலடி