சென்னை:தேசத்தின் வளர்ச்சியில் அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் பங்கு குறித்து தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் நிறுவனர்களுடன் ஆளுநரின் எண்ணித் துணிக கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மேயர் சைதை துரைசாமி, காந்தியவாதி தமிழருவி மணியன், அமர் சேவா சங்கம் உள்ளிட்ட 10 சமூக ஆர்வலர்கள் மற்றும் தொழில் பயிற்சி நிபுணர்கள் கௌரவிக்கப்பட்டனர். அப்போது மேடையில் பேசிய காந்தியவாதி தமிழருவி மணியன், “ஆறு மாதங்களுக்கு முன்பாகவே ஆளுநரை தனியாக சந்தித்தேன். 90 நிமிடங்களுக்கும் மேல் பல்வேறு கருத்துகளை ஆங்கிலத்தில் பகிர்ந்து கொண்டோம். ஆனால், ஆளுநர் அரசியல் பற்றி எதுவுமே பேசவில்லை.
அது வியப்பாக இருந்தது. தமிழர்களைப் பற்றியும் அவர்களது வாழ்வியலைப் பற்றியும் ஆன்மிகம் இலக்கியம் குறித்தும், வள்ளுவம் குறித்தும், அதனை ஜியூபோப் மாெழி பெயர்த்த விதம் குறித்தும் , தமிழ்நாட்டு மக்கள் படும் சிரமங்களை எல்லாம் அவர் என்னுடன் பகிர்ந்துகொண்ட செய்திகளை இன்றும் நான் வியப்புடன் தான் பார்க்கிறேன்.
பாரதி, உலக மக்கள் ஒரு தவம் செய்ய வேண்டும் என கூறுவார். இந்த மண்ணில் வந்து சேர்ந்த அனைவரும் நாம் எதை அடைய விரும்புகிறோமோ நான் சொல்லும் தவத்தை செய்தால் அடைய முடியும். அன்பும் இன்பமும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள். அவற்றை தனித்தனியாகப் பிரிக்க முடியாது. ஆளுநருடன் நான் பேசிவிட்டு திரும்பும்போது அவரை மதம் சார்ந்த நபராகப் பார்க்க முடியவில்லை.