சென்னை:தமிழக பள்ளிக்கல்வித் துறையின் முன்னெடுப்பாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் இருந்து பல்வேறு போட்டிகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில், 50 பேர் கல்விச் சுற்றுலாவுக்காக ஜப்பான் சென்றுள்ளனர். அப்போது, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஜப்பானில் உள்ள பள்ளிக்கூடங்களுக்குச் சென்று பார்வையிட்டார்.
அரசுப்பள்ளி மாணவர்கள், ஜப்பானில் வாழும் தமிழர்களைச் சந்தித்து உரையாடல் நிகழ்த்தும் விதமாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இந்நிகழ்வில், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பிரசன்னா பார்த்தசாரதி அரசு பள்ளிக்கல்வித்துறை அலுவலர்களையும், ஆசிரியர்களையும், மாணவர்களையும் வரவேற்றார்.
"திரைகடல் ஓடியும்" என்ற தலைப்பில் ஜப்பானில் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றி வரும் முன்னாள் அரசுப் பள்ளி மாணவர்களின் அறிமுக காணொளி ஒளிபரப்பப்பட்டது. அரசுப் பள்ளியில் படித்து முதல் தலைமுறை பட்டதாரியாக உருவாகி, உலகளவில் திறம்பட பணிபுரியும் தமிழர்கள், தற்போது கல்விச் சுற்றுலாவிற்காக வந்திருக்கும் மாணவர்களிடம் தங்களது பணி அனுபவம், மற்றும் ஜப்பானிற்கு படிக்க அல்லது வேலைக்காக வருவோருக்குத் தேவையான அடிப்படை விஷயங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
ஜப்பானில் உள்ள கல்வி, வேலை வாய்ப்புகளைப் பற்றி பிரசன்னா பார்த்தசாரதி, கணேஷ் பாண்டியன் நமச்சிவாயம், குமரவேல் திருமணஞ்சேரி, ஆசிரியை கண்மணி கோவிந்தசாமி, ராஜேஷ்குமார் உள்ளிட்டோர் பகிர்ந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து, ஜப்பான் தமிழர்கள் மூலம் சிறப்பான பறையாட்டம், கும்மியாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.