சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்தில் இருந்து கடந்த 9ஆம் தேதி தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக மகளிரணி செயலாளருமான கனிமொழி டெல்லிக்கு சென்றார். அப்போது சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனை பகுதியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படை பெண் காவலர் ஒருவர், இந்தியில் கேள்வி கேட்டார். அப்போது கனிமொழி தனக்கு இந்தி தெரியாது. தமிழ் அல்லது ஆங்கிலத்தில் கேட்குமாறு கூறினார்.
இதையடுத்து அந்த காவலர், ‘இந்தி தெரியாமல் இந்தியரா’ எனக் கேட்டதாக டுவிட்டரில் கனிமொழி பதிவிட்டு இருந்தார். இதனால் பெரும் பரபரப்பும் சர்ச்சையும் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து காங்கிரஸின் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இது போல் தனக்கும் நடந்ததாக ட்வீட் செய்தார்.
இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என மத்திய தொழில் பாதுகாப்புப் படை அலுவலர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, பாதுகாப்பு பணியில் இருந்த அந்த காவலரிடம் மத்திய தொழில் பாதுகாப்புப் படை அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டனர்.