சென்னை:வாழ்நாள் முழுவதும் தமிழை தனது முழுமூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர் புலவரும் முதுபெரும் தமிழ் அறிஞருமான மா.நன்னன். இவர், கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த சாத்துகுடல் என்னும் ஊரில், கடந்த 1924ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி பிறந்தார். இவரது இயற்பெயர் திருஞானசம்பந்தன். தமிழ் மீது கொண்ட பற்றால் தனது பெயரை நன்னன் என மாற்றிக் கொண்டார்.
தமிழை வடமொழி கலப்பு இல்லாமல் அடுத்த தலைமுறையிடம் கொண்டு செல்ல வேண்டும், எளிய முறையில் சாதாரண மக்களும் தமிழை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அயராது பாடுபட்டவர். தொடக்கப்பள்ளி ஆசிரியராகப் பணியைத் தொடங்கிய இவர், ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டே தமிழில் முதுகலை பட்டம் பெற்றார்.
பிறகு, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டம் பெற்ற இவர், தொல்காப்பியம் பற்றி ஆய்வு செய்து, முனைவர் பட்டத்தையும் பெற்றார். பள்ளி ஆசிரியராகத் தொடங்கி, கல்லூரியில் பேராசிரியராக இருந்து, தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநராக உயர்ந்தார். ஓய்வு பெற்ற பிறகு நேரடியாகவே தமிழ்த் தொண்டு ஆற்றினார்.
பொதிகைத் தொலைக்காட்சியில் "எண்ணும் எழுத்தும்" என்ற தலைப்பில் சுமார் 17 ஆண்டுகள், எளிய முறையில் சாமானிய மக்களுக்கும் தமிழையும், அதன் இலக்கணத்தையும் எடுத்துச் செல்லும் வகையில் கற்பித்தல் சேவையை செய்தார். எழுத்தறிவித்தலில் 'நன்னன் முறை' என்ற புதிய முறையையே உருவாக்கியவர்.
படைப்புகளும், கொள்கைகளும்:1990ஆம் ஆண்டு முதல் 2000ஆம் ஆண்டு வரையிலான பத்து ஆண்டுகளில் மட்டுமே சுமார் 70 நூல்களை எழுதியுள்ளார். 'எல்லோருக்கும் தமிழ்', 'தவறின்றி தமிழ் எழுதுவோம்', 'தமிழ் எழுத்தறிவோம்', 'கல்விக்கழகு கசடற எழுதுதல்', 'உரைநடையா? குறைநடையா?' ஆகிய நூல்கள் அவரது படைப்புகளில் முக்கியமானவை.
பெரியார் மீதும் அவரது கொள்கைகள் மீது தீவிர பற்று கொண்டிருந்தவர் நன்னன். கடவுள் மறுப்பு, பகுத்தறிவு, கலப்பு திருமணம், எழுத்துச் சீர்திருத்தம் ஆகியவற்றை ஆதரித்தார். பெரியாரிய சிந்தனைகளை ஆதரித்த நன்னன், சமூகம் சார்ந்த நூல்களையும் எழுதியுள்ளார். அவற்றில், பெரியாரைக் கேளுங்கள் என்ற நூல், தமிழ் வளர்ச்சித் துறையின் 2009ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சமூகவியல் பிரிவில் பரிசு பெற்றது. 'இவர்தாம் பெரியார்', 'பெரியார் கணினி' ஆகிய நூல்களை எழுதினார். மேலும், "பெரியாரியல்" என்ற பெயரில் மொழி, இலக்கியம், கல்வி உள்ளிட்ட பல தலைப்புகளில் புத்தகங்களை எழுதியுள்ளார்.
ஆங்கிலேயர்கள் காலத்தில் 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்திலும், திராவிட இயக்க உணர்வு பெற்ற பிறகு, இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டங்களிலும் பங்கேற்றார். ரயில் நிலையங்களில் இருந்த பெயர்ப்பலகைகளில் இந்தி எழுத்துக்களை அழித்து போராடியபோது, கைதாகி சிறை சென்றார். சமூகம், அரசியல் உள்ளிட்டவை குறித்து பல மேடைகளில் பேசியுள்ளார்.