சென்னை :தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 14 ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
மழைக்கு வாய்ப்புள்ள இடங்கள்: டிசம்பர் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதைத் தொடர்ந்து, 12 ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கபட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை:கடந்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், வடதமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுச்சேரியில் லேசான மழை பதிவாகி உள்ளது. மேலும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையானது நிலவியது.
கடந்த 24 மணிநேரத்தில், அதிகபட்சமாக நீலகிரி மாவட்டாத்தில் 12 சென்டி மீட்டர் மழையும், கோவை பீளமேடு பகுதியில், 11 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. இதை தொடர்ந்து கோவை, திருப்பூர், மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, கடலூர் உள்ளிட்ட அநேக மாவட்டங்களிலும் மழை பெய்துள்ளது.
மேலும் வடகிழக்கு பருவமழையானது அக்டோபர் 1ஆம் தேதி முதல் டிசம்பர் 9ஆம் தேதி வரை 380.9 மி.மீ அளவு பதிவாகியுள்ளது. இந்த காலகட்டத்தில் இயல்பான மழை அளவு 391.0 மி.மீ அகும். ஆனால் இது இயல்பை விட 3 சதவிகிதம் குறைவானதாக பதிவாகியுள்ளது.