சென்னை:தமிழ்நாட்டிற்கும், கர்நாடகாவிற்கும் காவிரி நீரை பங்கிடுவதில் நீண்ட கால போராட்டம் இருந்து வருகிறது. இந்த சிக்கலைத் தொடர்ந்து, நீரை முறையாக பங்கிட்டு தர நடுவர் மன்றம் மத்திய அரசால் அமைக்கப்பட்டது. இந்த நடுவர் மன்றம் மூலம் ஆண்டுதோறும் குறிப்பிட்ட அளவிலான நீரை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. நடுவர் மன்றத் தீர்ப்பில் உடன்படாத கர்நாடக அரசு, இதை எதித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.
வழக்கை தொடர்ந்து உச்ச நீதிமன்றமும், தமிழகத்திற்கு வழங்கப்பட்டு வந்த 192 டி. எம். சி தண்ணீரை குறைத்து 177 டி. எம். சி ஆக வழங்க உத்தரவிட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை காவிரியில் மேட்டூர் அணையில் தான் அதிக அளவு தண்ணீரை சேகரிக்க முடியும். கல்லணையில் குறைந்த அளவு தண்ணீரையே சேகரிக்க முடியும்.
எனவே ஒட்டு மொத்தமாக 177 டி. எம். சி தண்ணீரையும் திறந்து விட்டால் அதனை சேகரிக்கும் அளவிற்கு பெரிய அணை தமிழகத்தில் இல்லை. மேலும் அவ்வாறு திறந்துவிட்டால் அதிக மழை பெய்யும் காலங்களில் அணையில் நீரை சேகரிக்க முடியாமல், அனைத்து நீரும் வீணாக கடலுக்குள் தான் செல்லும். இதனால் 177 டி. எம். சி தண்ணீர் மாதம்தோறும் தமிழகத்திற்கு பிரித்து வழங்கப்படுகிறது.
அந்த வகையில் கடந்த ஜூன் மாதத்திற்கான தண்ணீர் வழங்கப்பட்டது. மேட்டூர் அணையில் ஆண்டுதோறும் விளைச்சலுக்காக அணையில் இருந்து நீரானது ஜூன் 12ம் தேதி திறந்து விடப்படும். அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் ஜூன் 12ம் தேதி அணையில் இருந்து நீரானது திறந்து விடப்பட்டது. அதனை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று மலர்கள் தூவி திறந்து வைத்தார்.
ஆனால் தற்போது மேட்டூர் அணையில் 49 டி. எம். சி தண்ணீர் மட்டுமே உள்ளது. இந்த தண்ணீர் விவசாயத்திற்கு போதுமானதாக இருக்காது என்பதால், இந்த மாதம் ஜூலைக்கான தண்ணீரை திறந்து விட வேண்டும் என தமிழக அரசு காவிரி நிதி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.