சென்னை: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் இளநிலை பட்டப்படிப்புகளுக்கான கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு மற்றும் பி.டெக் தொழில்நுட்ப பட்டப் படிப்புகளில் சேர்வதற்கு 7 நாளிலேயே 12 ஆயிரத்து 497 பேர் விண்ணப்பித்துள்ளனர். மேலும் கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு பட்டப்படிப்பில் சேர்வதற்கு 10 ஆயிரத்து 50 மாணவர்களும், பிடெக் தொழில்நுட்ப படிப்புகளில் சேர்வதற்கு 2 ஆயிரத்து 47 மாணவர்களும் விண்ணப்பம் செய்துள்ளனர்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தில் இளநிலைப் பட்டப்படிப்புகளில் கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பாராமரிப்பு பட்டப்படிப்பில் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் 120 இடங்களும், நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஒரத்தநாடு கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றில் தலா 100 இடங்களும், சேலம் தலைவாசல் கூட்டுரோடு, தேனி வீரப்பாண்டி, உடுமலைப்பேட்டை கால்நடை மருத்துவக்கல்லூரி ஆகியவற்றில் தலா 80 இடங்களும் என 660 உள்ளது.
உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்பில் (பி.டெக்) கோடுவளி உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் 40 இடங்களும், ஓசூர் மத்திகிரி கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்பு (பிடெக்) 40 இடங்களும், கோடுவளி உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக்கல்லூரியில் பால்வளத் தொழில்நுட்ப பட்டபடிப்பில் 20 இடங்களும் நிரப்பட உள்ளது.