சென்னை: தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் ஆகியவற்றில் உள்ள 12,838 பதிவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. மாநகராட்சியில் 4 பேர், நகராட்சியில் 18 பேர், பேரூராட்சியில் 196 பேர் என மொத்தம் 218 பேர் போட்டியின்றித் தேர்வுசெய்யப்பட்டனர்.
வேட்புமனுக்கள் நிராகரிப்பு, திரும்பப் பெற்றதுபோக மொத்தம் 57,778 பேர் தேர்தலில் போட்டியிட்டனர். இத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற்றது.
தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (பிப்ரவரி 22) காலை தொடங்கியது. இதற்காக சென்னை மாநகராட்சியில் 15 வாக்கு எண்ணிக்கை மையங்கள் உள்பட தமிழ்நாடு முழுவதும் 268 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டன.
மூன்றடுக்குப் பாதுகாப்பு
வாக்கு எண்ணிக்கை மையங்களில் அசம்பாவிதத்தைத் தடுக்க மூன்றடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டது. அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களும் சிசிடிவி மூலம் காண்காணிக்கப்பட்டன.
முதல்கட்டமாக அஞ்சல் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. பல இடங்களில் வாக்கு எண்ணிக்கை தீவிரமாகவும் சில இடங்களில் போதிய வசதி இல்லாததால் வாக்கு எண்ணிக்கை தாமதமாகவும் நடைபெற்றது.