சென்னை:ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான பணப்பலன்களை வழங்குதல், ஊதிய உயர்வு, காலிப்பணியிடங்களை நிரப்புதல், பழைய ஓய்வூதிய திட்டம் அமல் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் நேற்று (ஜன.09) முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தைத் துவங்கினர்.
இந்த போராட்டத்திற்கு திமுகவின் தொழிற்சங்கமான தொமுச, காங்கிரஸ் தவிர்த்து பல்வேறு சங்கங்கள் தங்கள் ஆதரவினைத் தெரிவித்து போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்தினர். தொமுச சங்கத்தினர் மற்றும் தற்காலிக ஓட்டுநர்களைப் பயன்படுத்தி தமிழக அரசு நேற்று முதல் பேருந்துகளைத் தொடர்ந்து இயக்கி வந்தது.
இந்நிலையில் பொங்கல் பண்டிகை சமயத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துகிறது என உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் இன்று விசாரணைக்கு வந்த போது இருதரப்பு வழக்கறிஞர்கள் தங்களது வாதங்களை முன் வைத்தனர்.