சென்னை:கரோனா வைரஸ் பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து தடுப்பூசி கண்டறியப்பட்டு அவற்றிற்கு இந்திய மருத்துவ கழகம் ஒப்புதல் வழங்கி பயன்பாட்டிற்கு வந்துள்ளது. கடந்த ஏப்ரல்11ஆம் தேதி வரை 10 கோடி டோஸ் தடுப்பூசியில் 44 லட்சம் தடுப்பூசி வீண் செய்யப்பட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.
போதிய விழிப்புணர்வு இல்லாதது வீண் வதந்தி உள்ளிட்ட காரணங்களினால் தடுப்பூசி செலுத்தி கொள்வதில் தமிழ்நாடு பின்னடைவை சந்தித்துள்ளது.
கரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு உள்ளதாக கூறப்படும் நிலையில், ஆர்டிஐ மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு, இந்தியாவில் அதிகபட்சமாக தமிழகத்தில் 12.10 விழுக்காடு , ஹரியானா 9.74 விழுக்காடு, பஞ்சாப் 8.12 விழுக்காடு, மணிப்பூர் 7.8 விழுக்காடு, தெலுங்கானா 7.55 விழுக்காடு தடுப்பூசிகளை வீண் செய்துள்ளது தெரியவந்துள்ளது,
கேரளா,மேற்கு வங்கம், கோவா, ஹிமாச்சல்,மிசோரம் உள்ளிட்ட மாநிலங்கள் முழுமையாக தடுப்பூசியை உபயோகித்துள்ளதும் ஆர்டிஐ தகவலில் தெரியவந்துள்ளது. அதே போல் மஹாராஷ்டிரா, டெல்லி, பஞ்சாப் மாநிலங்களுக்கு மக்கள் தொகைக்கு ஏற்ப போதிய தடுப்பூசி ஒதுக்கவில்லை என்ற குற்றசாட்டும் எழுந்துள்ளது.
அனைத்து தரப்பினருக்கும் தடுப்பூசி சென்று சேர வெளிநாட்டு தடுப்பூசிகளுக்கு அவசர ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மே 1ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்க நிதித்துறை அமைச்சகம் 4,500 கோடி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது. இந்தத் தொகை சீரம் இன்ஸ்டியூட்டிற்கு ரூ. 3,000 கோடி, கோவாக்சின் நிறுவனத்திற்கு ரூ.1,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.