தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ETV Bharat 2022 Roundup: தமிழ்நாட்டின் நியூஸ் மேக்கர்கள் யார் யார்? - திருமாவளவன்

தமிழகத்தில் 2022ஆம் ஆண்டு நியூஸ் மேக்கர்கள் யார் யார் என்பது குறித்து ஒரு அலசலை இந்த தொகுப்பில் காணலாம்...

Etv Bharat
Etv Bharat

By

Published : Dec 21, 2022, 5:32 PM IST

1. உதயநிதி ஸ்டாலின்

தொடரும் வாரிசு அரசியல் என்பதை நிரூபிக்கும் வகையில், அமைச்சரவையில் இணைந்துள்ள உதயநிதி ஸ்டாலின், 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன் தி.மு.க. இளைஞர் அணி செயலாளராக நியமிக்கப்பட்டது முதலே திமுகவின் இளந்தலைமுறை முகமாக இருந்து வருகிறார். திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்தே, அதிகார மையமாக உருவெடுத்தார்.

இந்த ஆண்டு, இலவச இணைய வசதி முதலில் இவரது திருவல்லிக்கேணி தொகுதியில் தொடங்கப்பட்டது, தொகுதிக்கென பிரத்யேக செல்போன் செயலியை உருவாக்கியது ஆகியவற்றுடன் மாற்றுத்திறனாளிகள் மெரினா கடற்கரைக்குச் செல்ல நிரந்தர பாதை இவரது முயற்சியால் அமைக்கப்பட்டது. செஸ் ஒலிம்பியாட் பணிகளை ஒருங்கிணைத்து பாராட்டுகளைப் பெற்றார். கட்சியை வலுப்படுத்தத் தொகுதிவாரியாகத் திராவிட மாதிரி பயிற்சிப் பட்டறை நடத்தியது குறிப்பிடத்தக்கது. அமைச்சராகப் பதவி ஏற்றது முதல் முதல்வரை பின்னுக்குத் தள்ளி இவர் தான் நியூஸ் மேக்கராக இருந்து வருகிறார்.

உதயநிதி ஸ்டாலின்

2. அண்ணாமலை

நான்கே சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தாலும், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி பாஜக-தான் என்ற பிம்பத்தைக் கட்டியமைத்ததில் அண்ணாமலைக்கு மிகப்பெரும் பங்கு உண்டு. பிளவுபட்டு இருக்கும் அதிமுக-வை பின்னுக்குத் தள்ளி , பாஜக-வை முன்னிலைப் படுத்துவதில் முனைப்பாக இருக்கிறார்.

ஆளும் திமுகவும், இவரது விமர்சனங்களைப் புறந்தள்ளாமல் தொடர்ந்து ஈடுகொடுப்பது, ஊடகங்களில் இவரது இருப்பு உறுதி செய்து வருகிறது. மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் இவருக்குமான வார்த்தைப் போர் மற்றும் அவ்வப்போது ஆளுநரைச் சந்திப்பது, பத்திரிகையாளர்களை தரக்குறைவாகப் பேசுவது, காவல்துறையைக் குற்றம்சாட்டுவது எனத் தொடர்ந்து பரபரப்புக்குப் பஞ்சமின்றி தன்னை வைத்துக் கொள்கிறார்.

மோடியுடன் அண்ணாமலை

3. மேயர் பிரியா ராஜன்

இளங்கன்று பயமறியாது என்பதற்கேற்ப முதல்வர் காரில் தொற்றிக் கொண்டு போனது என சர்ச்சைகளுக்குப் பெயர் போனவர் சென்னை மேயர். இவர் பதவிக்கு வந்ததே பலரை வியப்பில் ஆழ்த்தியது. இந்த ஆண்டு மார்ச் மாதம் பதவி ஏற்றது முதலே நியூஸ் மேக்கராக இருந்து வருகிறார். தனியாக ஆய்வு செய்யவில்லை, பேட்டி தருவதில்லை.

அமைச்சர் நேரு தலைமைச் செயலகத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது மேயர் பிரியாவை ஒருமையில் பேசிய வீடியோ, அமைச்சர் சேகர் பாபு கலந்து கொண்ட கூட்டத்தில் அமைச்சருக்கு மேயர் குடை பிடித்தபடி நின்றது என தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி நியூஸ் மேக்கராக இருந்து வந்தார்.

சர்ச்சைகள் ஒரு பக்கம் இருந்தாலும், மழைநீர் தேங்காமல் இருக்க மழைநீர்க் கால்வாய்களை அமைத்தற்குக் குறிப்பாக வடசென்னை மக்களின் பாராட்டுகளை ப் பெற்றார். அதுமட்டுமின்றி களத்தில் இறங்கி மக்களைச் சந்தித்தது நற்பெயரை வாங்கி தந்தது. சர்ச்சையில் நியூஸ் மேக்கராக இருந்தாலும், பணிகளிலும் அவர் பல முறை நியூஸ் மேக்கராக இருந்து உள்ளார்.

மேயர் பிரியா

4. ஆளுநர் ஆர்.என்.ரவி

கடந்த வருடம் இறுதியில் ஆளுநராகப் பதவியேற்ற பின்னர் , தான் கலந்து கொள்ளும் அனைத்து விழாக்களிலும், நிகழ்ச்சிகளிலும் தமிழக அரசை மறைமுகமாகக் குற்றம்சாட்டுவது, மத்திய அரசு திட்டத்தை ஆதரித்து பேசுவது, திராவிடத்தைத் தாக்குவது , சாதனத்தை உயர்த்திப் பேசுவது என வாரம் ஒரு முறை நியூஸ் மேக்கராக இருந்து வருகிறார்.

இது ஒரு பக்கம் இருக்க, தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட , ஆன்லைன் ரம்மி தடை என பல்வேறு சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க வில்லை என ஆளுநர் மீது குற்றச்சாட்டு உள்ளது. பல்கலைக்கழக துனைந்தர்களை தன்னிச்சையாக நியமிப்பது, அவர்களைக் கூட்டுவது என அவரது செயல்பாடுகள் போட்டி அரசு நடத்துகிறார் என்ற விமர்சனமும் உள்ளது. அனைத்திற்கும் மேலாக ஆளுநரை திருப்பப் பெற வேண்டும் என்ற குரல் வலுவாக எழுந்து டெல்லி வரை சென்றுள்ளதால் ஆளுநர் இந்தியா அளவில் நியூஸ் மேக்கராக இருந்தார்.

ஆளுநர் ரவி

5. இபிஎஸ் - ஓபிஎஸ்

கோஷ்டி மோதல் மற்றும் எதிர்க்கட்சி என்ற முறையில் , இபிஎஸ் - ஓபிஎஸ் இருவருமே ஊடகங்களில் முக்கிய இடம்பிடித்தனர். இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்தே , இருவருக்கும் இடையே நிலவிய கருத்து வேறுபாடு ஜூலை பொதுக்குழுவில் ஓபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு அதிமுக பிளவு பட்டதில் முடிந்தது. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிமுக தலைமை அலுவலகத்தில் அரங்கேற்றிய வன்முறை மற்றும் தொடரும் நீதிமன்ற வழக்குகள் என செய்திக்குப் பஞ்சமில்லை. இருவருடன், டிடிவி, சசிகலா ஆகியோரின் இணைப்பு என எப்போதும் ஊடக வெளிச்சத்திலிருந்து வருகிறார்கள்.

ஓபிஎஸ் - ஈபிஎஸ்

6. திருமாவளவன்

ஏதாவது ஒரு வகையில் நியூஸ் மேக்கராக எப்போது ம் இருந்து வருகிறார். இந்த ஆண்டு மத்திய அரசைக் கண்டித்தும், ஆர் எஸ் எஸ் அமைப்பை விமர்சனம் செய்தும் தொடர்ந்து அவரது குரல் மக்கள் மத்தியில் ஒலித்துக்கொண்டே இருந்தது. அதுமட்டுமின்றி மனுஸ்மிருதி பற்றிய சர்ச்சை தமிழகத்தில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. பெண்களை இழிவாகப் பேசும் மனுஸ்மிருதியைத் தடை செய்ய வேண்டும் என பல போராட்டங்கள் திருமாவளவன் தலைமையில் நடந்தது.

இந்த நூலை ஆதரித்தும், திருமாவளவனுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் சில ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. கடந்த மாதம் திருமாவளவன் தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் மனுஸ்மிருதி பிரதிகளை அச்சிட்டு மக்களுக்கு இலவசமாக விநியோகம் செய்தார். எனவே இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து இறுதி வரை அவர் நியூஸ் மேக்கராக இருந்து வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகன், இவரைத் தமிழகத்தின் தவிர்க்க முடியாத அரசியல் பேராளுமை என்று கூறுகிறார்.

திருமாவளவன்

7. பேரறிவாளன் மற்றும் 6 பேர்

அற்புதம்மாள் என்ற தாயின் தளராத போராட்டம் , பேரறிவாளனின் விடுதலையில் தொடங்கி , ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று வந்த நளினி உட்பட அறுவரின் விடுதலைக்கு அடித்தளமிட்டது. பேரறிவாளன் எப்பொழுதும் நியூஸ் மேக்கர் தான். இந்த ஆண்டு தொடக்கத்தில் அவரது விடுதலை பற்றி அதிக விவாதங்கள் எழுந்தது. ஏப்ரல் மாதம் முதல் அவர் வழக்கு விசாரணைக்கு வரும் தேதிகளில் பேரறிவாளன் தான் பெரிய விவாதமாக மாறினார்.

31 ஆண்டுகளுக்குப் பிறகு மே மாதம் விடுதலை ஆன அவரை முதல்வர் ஸ்டாலின் அரவணைத்தது விமர்சனத்திற்கு உள்ளானது. அறிவின் விடுதலையை அடுத்து நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ஆர்.பி. ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஆகிய 6 பேரை விடுதலை செய்து கடந்த மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து காங்கிரஸ் அறிக்கை போராட்டம் நடத்தினர். எனவே இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து இறுதி வரை பேரறிவாளன் அல்லது அவருக்குத் தொடர்புடைய செய்திகள் வந்துகொண்டே தான் இருந்தது.

பேரறிவாளன்

8. கமல்ஹாசன்

உலக நாயகன் தொடர்ந்து ஏதாவது ஒரு வழியில் தன் இருப்பை காட்டி வருகிறார். சட்டமன்ற தேர்தல் தோல்வியில் துவண்டுவிடாமல், இந்த ஆண்டு தொடக்கத்தில் உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டியிட்டது. அப்போது அவர் கட்சி சார்பில் அவர்தான் தமிழகம் முழுக்க களமாடினார். தேர்தல் முடிந்த உடன் விக்ரம் திரைப்படம் வெளிவந்து மிகப்பெரிய வெற்றிபெற்றது.

அந்த கொண்டாட்டம் முடிவதற்குள் அடுத்த படத்திற்கான அப்டேட் வெளியிட்டு சமூக வலைத்தளம் முழுவதும் ஆட்கொண்டார். அதே சமயம் திரைப்படத்தில் கவனம் செலுத்தி கட்சியை மறந்து விட்டார் என்ற விமர்சனமும் எழுந்தது. அதை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கத் தொடங்கிவிட்டார். அந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக சென்றுகொண்டு இருக்க, நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஆலோசனை கூட்டம் நடத்த தொடங்கிவிட்டார்.

கமல்

9. அமைச்சர்கள்

பொதுவாக அமைச்சர்கள் தினமும் நியூஸ் மேக்கராக இருப்பார்கள். இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர் ஆகிய இருவரும் இந்த ஆண்டின் நியூஸ் மேக்கராக இருந்து வருகின்றனர். நியூஸ் மேக்கராக இருந்த காரணம்: மா. சுப்பிரமணியன் ( நீட் தேர்வு எதிர்ப்பு, எய்ம்ஸ் மருத்துவமனை, மழைக்கால நோய்கள், தமிழில் மருத்துவப்படிப்பு).

நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர் ( மத்திய அரசை, குறிப்பாக நிதித்துறையை எதிர்த்து கருத்து தெரிவிப்பது, ஜி எஸ் டி வரி குறித்துப் பேசுவது மற்றும் திராவிட சித்தாந்தத்தை ஆங்கில தொலைக்காட்சிகளில் தெளிவாக எடுத்துவைப்பது).

10. விஜய்

நடிகராக, விஜய் எப்போது மே நியூஸ் மேக்கர் தான். ஆனால் இந்த ஆண்டு அரசியலிலும் நியூஸ் மேக்கராக இருந்து உள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் பல்வேறு இடங்களில் போட்டியிட்டது கிட்டத்தட்ட 51 இடம் வெற்றிபெற்று இருப்பதாக அந்த இயக்கம் தெரிவித்ததுள்ளது. அன்று பிரதான காட்சிகளை கடந்து விஜய் தான் நியூஸ் மேக்கராக இருந்தார்.

உள்ளாட்சி தேர்தல் முடித்த உடன் படங்களில் முழுக்கவனம் செலுத்திவிட்டார். கடந்த 2 மாதங்களாக இயக்கத்தை எவ்வாறு பல படுத்தலாம் என்று மாவட்ட செயலாளர்கள் உடன் ஆலோசனை நடத்தி வருகிறார். எப்போது அரசியலில் வலுவாக கால் பதிப்பார் என்ற எதிர்பார்ப்பு உள்ளவரை , அவர் நியூஸ் மேக்கர்தான்.

விஜய்

இதையும் படிங்க:ETV Bharat 2022 Roundup: வசூல் வெற்றி கண்ட தமிழ் திரைப்படங்கள் ஓர் பார்வை!

ABOUT THE AUTHOR

...view details