சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட பள்ளிக்கல்வித்துறை ஆணையர் பணியிடத்தை மாற்றி மீண்டும் இயக்குனர் பணியிடம் கொண்டு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆசிரியர்கள் நன்றி தெரிவித்தனர். பள்ளிக்கல்வித்துறையில் ஏற்கனவே இருந்த 'இயக்குனர்' பணியிடத்திற்கு 'ஆணையர்' என்ற பணியிடத்தை கடந்த அதிமுக ஆட்சியின் போது கொண்டு வந்தனர். இதைத்தொடர்ந்து, அப்போதைய முதல் ஆணையராக சிஜி தாமஸ் வைத்தியன் (Sigy Thomas Vaidhyan IAS) நியமனம் செய்யப்பட்டிருந்தார். இதனைத்தொடர்ந்து மேலும், சில ஐஏஎஸ் அதிகாரிகள் ஆணையராக பணியிட மாற்றத்தின் மூலம் பணியாற்றினர்.
இந்த நிலையில், திமுக ஆட்சி அமைந்த உடன் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பணியிடத்தினை மாற்றி ஆணையர் பணியிடமாக நியமனம் செய்தனர். அதற்கு பல்வேறு தரப்பிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனைத்தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் பணியிடம் மாற்றப்பட்டு, பள்ளிக்கல்வித்துறை இயக்குனராக க.அறிவொளி (G Arivoli IAS) நியமனம் செய்யப்பட்டார். தொடக்கக்கல்வித்துறை இயக்குனராக கண்ணப்பன் நியமனம் செய்யப்பட்டார்.
இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள ஆசிரியர்கள் முதலமைச்சருக்கும், அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமாெழிக்கும் நன்றி தெரிவித்துள்ளனர். இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் தியாகராஜன் கூறும்பாேது, 'கடந்த அதிமுக ஆட்சியின்போது, 2017 பள்ளிகளுக்கான துறையின் உயர் பதவியான 'பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்' பணியிடம் இருக்கும்போது, 'பள்ளிக்கல்வி ஆணையர்' என்று ஒரு புதிய பதவி உருவாக்கி அதில் இந்திய ஆட்சி பணியை சேர்ந்த அதிகாரியை நியமனம் செய்தனர் என்றார்.
அவ்வாறு நியமனம் செய்யும்போது, ஆணையர் பணியிடத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றம் சார்பாக கடுமையான எதிர்ப்பை பதிவு செய்ததாகவும், இது குறித்து அப்போதைய திமுக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினிடமும் முறையீடு செய்யப்பட்டிருந்ததாகவும் கூறினார். இந்நிலையில் 2021-ல் திமுக பொறுப்பேற்றபோது, பள்ளிகளில் துறை ஆணையர் பணியிடம் ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்த்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ரத்து செய்யப்பட்டு பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அந்த இடத்தில் அமர வைக்கப்பட்டதாக கூறினார்.
இதையும் படிங்க: மீண்டும் வந்த பள்ளி கல்வித்துறை இயக்குநர் பதவி - 2 ஆண்டு காணாமல் போன காரணம் என்ன?