தமிழ்நாடு

tamil nadu

சென்னை - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கடும் கண்டனம்!

By

Published : Sep 4, 2020, 8:44 PM IST

சென்னை : கலவரத்தைத் தடுத்த காவல் கண்காணிப்பாளரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்த தமிழ்நாடு அரசு மீண்டும் அவரை ராமநாதபுரத்தில் பணி நியமனம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Tamil Nadu Tawheed Jamaat has issued a statement condemning the Tamil Nadu government
Tamil Nadu Tawheed Jamaat has issued a statement condemning the Tamil Nadu government

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில பொதுச் செயலாளர், முஹம்மது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ராமநாதபுரம் மாவட்டம், வசந்தம் நகரில் வசித்து வந்த அருண் பிரகாஷ் என்பவர் கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி சில நபர்களால் கொலை செய்யப்பட்டார். முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடைபெற்றது என அந்தப் பகுதி மக்கள் அறிந்திருந்த நிலையில், இதை வைத்து ராமநாதபுரம் மாவட்டத்தில் மதக் கலவரத்தை தூண்டி விடுவதற்கு சங்பரிவார் சக்திகள் முயற்சி செய்தார்கள். இந்தப் படுகொலை விவகாரம் குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்த பாஜகவின் எச்.ராஜா, அருண் பிரகாஷை இஸ்லாமியர்கள் படுகொலை செய்து விட்டார்கள், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வன்முறையைத் தூண்டிவிடும் வகையில் செய்தி வெளியிட்டிருந்தார்.

அதுமட்டுமின்றி பாஜக, சங் பரிவார் அமைப்புகளைச் சேர்ந்த பலரும் இந்தப் படுகொலை மதமோதலால் நடைபெற்றது. இஸ்லாமியர்கள் திட்டமிட்டுப் படுகொலை செய்து விட்டார்கள் என்று வெளிப்படையாகவே கருத்துக்களை வெளியிட்டு மக்களிடம் பதட்டத்தையும், கலவர பீதியையும் உண்டாக்கினார்கள். இந்நிலையில் இந்தக் கொலையில் தொடர்புடைய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் பதட்டம் அதிகரித்திருந்த நிலையில், இந்தக் கொலை, மத மோதலால் நடைபெற்றது அல்ல, தனிப்பட்ட விரோதம் காரணமாக நடைபெற்றது, இதை வைத்து மத மோதல்களைத் தூண்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி.வருண் குமார் தனது ட்விட்டர் பக்கத்திலும், இராமநாதபுரம் மாவட்ட காவல் துறையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் கருத்து வெளியிட்டிருந்தார்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் இந்த விளக்கத்தைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் பதற்றம் தணிந்தது. கலவர பீதியில் உறைந்து போயிருந்த மக்கள் நிம்மதி அடைந்தார்கள். தனிப்பட்ட விரோதத்தால் ஏற்பட்ட கொலையை வைத்து மதக் கலவரத்தைத் தூண்டி விட்டு அதில் குளிர்காய நினைத்த சங்பரிவார் சக்திகளின் சதி தவிடுபொடியாக்கப்பட்டது. ஆனால், ராமநாதபுரம் மாவட்டத்தை மட்டுமின்றி தமிழ்நாட்டையே கலவர பீதியில் இருந்து காப்பாற்றியுள்ள ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வருண் குமாரின் செயலுக்கு பாராட்டு தெரிவிக்காமல் அவரை அவசர அவசரமாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது தமிழ்நாடு அரசு.

நாட்டில் பதட்டமும், கலவரச் சூழலும் ஏற்படும் போது அதைக் கட்டுப்படுத்தும் வகையில் நடந்து கொண்ட ஒரு காவல் துறை அலுவலரின் சிறந்த செயலுக்கு காத்திருப்போர் பட்டியலை பரிசாகக் கொடுத்திருக்கும் இந்தச் செயல் தமிழ்நாடு மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத், டெல்லி போன்ற மாநிலங்களில் கலவரம் நடக்கும்போது அதைக் காவல் துறையினர் கண்டுகொள்ளாமல் இருந்ததைப் போல தமிழ்நாட்டிலும் காவல் துறையினர் கலவரத்தைக் கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டும், அப்படி இல்லாவிட்டால் அவர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்படுவார்கள் என்பதை இந்தச் சம்பவம் சொல்லாமல் சொல்லியிருக்கிறது.

வட மாநிலங்களில் சங்பரிவார சக்திகளின் ஆதிக்கம் காரணமாக காவல் துறையினர் அவர்களுக்கு பணிந்து போவதைப் போல தமிழ்நாட்டிலும் காவல் துறையினர் பணிந்து போக வேண்டும் என்பதையே இந்த நடவடிக்கை தெளிவுபடுத்துவதாக எண்ண வேண்டியுள்ளது. தனிநபர் உயிரைக் காப்பாற்றும் ஒருவருக்கு சுதந்திர தினம், குடியரசு தினத்தில் வீரதீர செயலுக்கான விருதுகளை வழங்கும் அரசாங்கம், ஒரு மாவட்டத்தையே கலவரத்தில் இருந்து காப்பாற்றியுள்ள ஒரு காவல் அலுவலரை காத்திருப்போர் பட்டியலில் வைத்துள்ள விவகாரம் வேதனையளிக்கிறது.

கலவரத்தை தடுப்பதற்காக விரைந்து பணியாற்றி கொலைக்கான காரணத்தை கண்டறிந்து மக்களின் பதட்டத்தை தனித்த காவல்துறை அலுவலர் வருண்குமாரை காத்திருப்போர் பட்டியலில் வைத்துள்ள இந்தச் செயலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மிக வன்மையாகக் கண்டிக்கிறது. காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை உடனடியாக ரத்து செய்து அவரை மீண்டும் ராமநாதபுரம் மாவட்டத்திற்கே நியமனம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கேட்டுக் கொள்கின்றது. சங்பரிவார சக்திகளின் மிரட்டலுக்கு பயப்படாமல் காவல் துறையும் அரசாங்கமும் பணியாற்ற வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details