சென்னை: தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம், கரோனா தொற்றின் காரணமாக கடந்த 2019ஆம் ஆண்டில் இருந்து புத்தகங்களை அச்சிட்டு வழங்கவில்லை. இந்த நிலையில், மீண்டும் தற்பொழுது புத்தகங்களை அச்சிட்டு மாணவர்களுக்கு விற்பனை செய்ய துவங்கி உள்ளது.
மேலும், 2023-2024ஆம் கல்வியாண்டிற்கான 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பயன்படும் மாதிரி வினாத்தாள் தொகுப்பு புத்தகங்கள், கணித தீர்வு புத்தகம் (தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில்) அச்சிடப்பட்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட விற்பனை மையங்களிலும் விற்பனை செய்யும் பணி துவங்கப்பட்டுள்ளது.
விலை: 10ஆம் வகுப்பு மாதிரி வினாத்தாள் தொகுப்பு ரூ.120 (தமிழ் மற்றும் ஆங்கில வழி), 10ஆம் வகுப்பு கணிதத் தீர்வு புத்தகம் ரூ.175 (ஆங்கில வழி), 10ஆம் வகுப்பு கணிதத் தீர்வு புத்தகம் ரூ.175 (தமிழ் வழி), 12ஆம் வகுப்பு கணிதத் தீர்வு புத்தகம் ரூ.160 (ஆங்கில வழி), 12ஆம் வகுப்பு கணிதத் தீர்வு புத்தகம் ரூ.160 (தமிழ் வழி), 12ஆம் வகுப்பு கணித COME புத்தகம் ரூ.160 (ஆங்கில வழி), 12ஆம் வகுப்பு கணித COME புத்தகம் ரூ.160 (தமிழ் வழி) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புத்தகத்தின் சிறப்பம்சம்கள்: 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாதிரி வினாத்தாள்களின் தொகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கு 6 மாதிரி வினாத்தாள்கள் வீதம், பொதுத்தேர்வு கட்டமைப்பின்படி தயாரிக்கப்பட்டுள்ளது.
10ஆம் வகுப்பு கணிதத்தீர்வு புத்தகத்தில் குறிக்கோள் வினாக்கள் உள்பட சுமார் 800க்கும் மேற்பட்ட பயிற்சி கணக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதால், இது மாணவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதப் பாடவரிசைக்கு கணிதத் தீர்வு புத்தகம் தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது.