தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவலர்களால் தாக்கப்பட்ட வழக்கறிஞருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு...! - Rs 5 lakh compensation to lawyer

புகாரைப் பதிவுசெய்து சான்றளிக்காதது குறித்து கேள்வி எழுப்பியதற்காகக் காவல் துறையினரால் தாக்கப்பட்டு, முதலுதவி வழங்காததால் பாதிக்கப்பட்ட வழக்கறிஞருக்கு ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கத் தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

காவலர்களால் தாக்கப்பட்ட வழக்கறிஞருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு
காவலர்களால் தாக்கப்பட்ட வழக்கறிஞருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு

By

Published : Dec 20, 2021, 8:09 PM IST

சென்னை: தூத்துக்குடி மாவட்டம் அரசூர் பூச்சிக்காடு கிராமத்தைச் சேர்ந்த குருநாத் சுரேஷ் என்பவர், தனது விவசாய நிலத்தில் சிலர் அத்துமீறி நுழைந்து பயிர்களைச் சேதம் செய்த விவகாரம் தொடர்பாகப் புகார் அளிக்க, வழக்கறிஞர் பெரியசாமியுடன் தட்டார்மடம் காவல் நிலையம் சென்றுள்ளார்.

அங்கு, புகாரைப் பதிவுசெய்து சான்றளிக்காதது குறித்து கேள்வி எழுப்பிய வழக்கறிஞரைத் தாக்கிய, காவல் உதவி ஆய்வாளர் சுந்தரம், சிறப்பு உதவி ஆய்வாளர் தேவராஜ், தலைமைக் காவலர் மார்த்தாண்ட பூபதி உள்ளிட்ட ஐந்து பேர், ஆபாசமாகத் திட்டி, முதலுதவி வழங்காமல் பொய் வழக்குப்பதிந்து, சட்டவிரோத காவலில் வைத்துள்ளனர்.

2018இல் நடந்த இந்தச் சம்பவம் தொடர்பாகக் காவல் துறை அலுவலர்களுக்கு எதிராகவும், சாத்தான்குளம் காவல் துணைக் கண்காணிப்பாளருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கக் கோரி, வழக்கறிஞர் பெரியசாமி, மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் மனு தாக்கல்செய்தார்.

மாநில மனித உரிமைகள் ஆணையம்

இந்தப் புகாரை விசாரித்த ஆணையத்தின் உறுப்பினர் துரை. ஜெயச்சந்திரன், காவல் துறையினருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் உள்ளதாகக் கூறி, பாதிக்கப்பட்ட வழக்கறிஞருக்கு ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீட்டை ஒரு மாதத்தில் வழங்கத் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டார். இத்தொகையில் உதவி ஆய்வாளரிடமிருந்து இரண்டு லட்சம் ரூபாயும், டிஎஸ்பியிடமிருந்து ஒரு லட்ச ரூபாயும் மற்ற நான்கு பேரிடமிருந்து தலா 50 ஆயிரம் ரூபாய் வீதமும் வசூலிக்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், ஐந்து காவல் துறையினருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, மூன்று மாதங்களில் உத்தரவு பிறப்பிக்கும்படி டிஜிபிக்கும் பரிந்துரைத்துள்ளார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளர் சுந்தரம், இதே நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் கூறப்படுவதால், அவரைச் சட்டம் ஒழுங்குப் பிரிவில் பணியமர்த்தக் கூடாது எனவும் பரிந்துரைத்துள்ளார்.

இதையும் படிங்க: கிராமப்புறங்களுக்குச் சென்று சேவையாற்றுகள் - ஸ்டாலின் கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details