சென்னை: நீட் தேர்வினால் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு நிகழ்ந்த பாதிப்புகள் குறித்த ஆய்வினை மேற்கொண்டு இருக்கும் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவிற்கு தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் மின்னஞ்சல் அனுப்பியுள்ளது.
அதில், 'சமூக நீதியை அடிப்படையாக கொண்டு இந்திய ஒன்றியத்திற்கே முன்னோடி மாநிலமாக, விரிவான ஆரம்ப நலவாழ்வு அமைப்புகள் மூலம் அனைவருக்கும் நலவாழ்வு என்ற இலக்கையும், அதிகமான உயர் கல்வி நிறுவனங்களின் காரணமாகவும் கல்லூரி வயதில் உள்ளவர்கள் (Gross Enrollment Rate) 50 விழுக்காட்டிற்கும் மேல் உயர் கல்வியில் இணைவது என்ற நிலையையும் நாம் எட்டி இருக்கிறோம்.
இதன் மூலமாக கல்வி மற்றும் நலவாழ்வு உள்ளிட்டவற்றில் மில்லினியம் மேம்பாட்டு இலக்குகளையும் (MDG), இப்போது எதிர்நோக்கியுள்ள நிலைத்த மேம்பாட்டு இலக்குகளையும் (SDG) நாம் வெகு வேகமாக எட்டியுள்ளோம்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள மருத்துவ, உயர் மற்றும் சிறப்பு படிப்புகளுக்கான இடங்களை நீட் தேர்வுக்காக, அகில இந்திய தொகுப்புக்கு கொடுப்பது, நாம் இதுவரை உருவாக்கி வைத்துள்ள கட்டமைப்பை உடைத்துவிடும்.
ஒரே மாதிரியான கல்விமுறை இல்லாமல், சமூகப் பொருளாதார பின்னணிக்கேற்ப இங்கே கல்விப் பாகுபாடு இருக்கும் சூழலில், நீட் தேர்வினை மருத்துவப் படிப்பிற்கான ஒரே அடிப்படையாக கொள்வது பன்னிரெண்டு ஆண்டு கல்வியினை ஒன்றுமில்லாமல் ஆக்குகிறது. இதுவரை கிடைக்கப்பெறும் தரவுகளின்படி, நீட் தேர்வுக்காக சிறப்புப் பயிற்சி வகுப்பிற்குச் செல்லாமல், நீட் தேர்வில் தேர்வானவர்கள் வெறும் குறைந்த விழுக்காடு மட்டுமே. இது பெரும் பொருளாதாரம் தேவைப்படும் தனிப்பயிற்சி, சிறப்பு வகுப்புகளை ஊக்குவிக்கிறது.
நீட் தேர்வு சிறப்பு வகுப்புகளுக்கான பயிற்சிக் கட்டணம் ஒன்றரை லட்சம் ரூபாய் முதல் பத்து லட்சம் ரூபாய் எனப் பரவி, நகரங்களுக்கு வெளியே தொலைதூர கிராமங்களில் உள்ள குழந்தைகள் மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட, சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகளின் மருத்துவக் கல்வி என்ற கனவிற்கு சாவு மணி அடிக்கிறது.
எனவே, தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம், நீட் தேர்வை முற்றிலுமாக நீக்கவேண்டும் என அரசிற்கு பரிந்துரைக்குமாறு ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவினை கேட்டுக்கொள்கிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நீட் தேர்வு கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம் - முதலமைச்சர் ஸ்டாலின்