சென்னை : தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், டி.என். சாம்பியன்ஸ் பவுன்டேஷன் சார்பில் 6 வீரர், வீராங்கனைகளுக்கு 30 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நிதி உதவிக்கான காசோலைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.
இது தொடர்பாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்த டி.என். சாம்பியன்ஸ் பவுன்டேஷன் சார்பில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சைக்கிளிங் (Cycling), செயிலிங் (Sailing), பளுதூக்குதல் (Weightlifting) மற்றும் கராத்தே (Karate) உள்ளிட்ட விளையாட்டுகளில் பங்கு பெற்று வரும் 6 வீரர், வீராங்கனைகளுக்கு 30 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நிதி உதவிக்கான காசோலைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை நேற்று (ஆகஸ்ட். 22) சென்னை முகாம் அலுவலகத்தில் வழங்கினார்.
சைக்கிளிங் வீராங்கனை செல்வி எம். பூஜா சுவேதாவிற்கு கார்பன் பிரேம் மற்றும் கார்பன் சக்கரங்களை வாங்குவதற்காக 12 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயும், ராயல் மெட்ராஸ் யாட் கிளப்பிற்கு தேசிய செயிலிங் போட்டிகளுக்காக 5 லட்ச ரூபாயும், உத்தரபிரதேஷம், கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்ற காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டிகளில் சீனியர், ஜூனியர் மற்றும் யூத் சாம்பியன்ஷிப்பில் தங்கப்பதக்கம் வென்ற வீரர் எல். தனுஷ், வெள்ளிப்பதக்கம் வென்ற வீரர் வி. கிஷோர் ஆகியோருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.