உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டியில் இரட்டை தங்கம் வென்ற தமிழக வீராங்கனைக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு சென்னை:தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் பெண்களுக்கான உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் 2023 போட்டிகள் நடைபெற்றது. இதில் 18 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றிருந்தனர், இந்தியாவில் இருந்து 8 பேர் இந்த போட்டியில் பங்கேற்றிருந்தனர். இதில் பங்கேற்ற இந்திய ஏ அணி வீராங்கனைகள் அனுபமா ராமச்சந்திரன் (தமிழ்நாடு), அமி காமினி (மத்தியப் பிரதேசம்) ஆகியோர் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை 4 க்கு 3 என்ற வெற்றிகள் கணக்கில் தோற்கடித்துத் தங்கப் பதக்கம் வென்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ருமேனியா நாட்டிn புக்கரெஸ்ட்டில் நடைபெற்ற உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் 2022 போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற அனுபமா, இந்த ஆண்டு தங்க பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவிலும் அனுபமா பட்டம் வென்று 2வது தங்கத்தைக் கைப்பற்றினார். 21 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் அனுபமா ராமச்சந்திரனும், தாய்லாந்து வீராங்கனை ப்ளாய்சோம்பூ லோகியாபாங்கும் மோதினர்.
சர்வதேச அரங்கில் முன்னணி வீராங்கனையாகத் திகழ்ந்து வரும் தாய்லாந்து வீராங்கனை முதலில் 2க்கு1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்தபோது தமிழக வீராங்கனை அனுபமா சுதாரித்து விளையாடித் தொடர்ந்து 2 சுற்றுக்களைக் கைப்பற்றி முன்னணி வீராங்கனைக்கு அதிர்ச்சி அளித்து 3க்கு 2 என்ற புள்ளிகள் கணக்கில் அனுபமா சாம்பியன் பட்டம் வென்றார்.
அனுபமா ராமச்சந்திரன் ஸ்னூக்கரில் ஈடுபடத் துவங்கிய ஆரம்பக்கட்டத்தில் சரியான பயிற்சியாளர் இல்லாமல் தவித்துள்ளார். இந்நிலையில் இந்திய அளவில் ஸ்னூக்கரில் இரண்டாம் தரவரிசையில் உள்ள வீரரான சலீம்-இன் சென்னை பயிற்சி மையத்தில் பயிற்சி பெறத் துவங்கியுள்ளார். சென்னையிலுள்ள சலீம் ஸ்னூக்கர் அகாடமியில் பயிற்சி பெற்றுவரும் அனுபமா, 2வது தங்கத்தை வென்று இந்தியாவுக்கும் குறிப்பாகத் தமிழகத்திற்கும் பெருமை தேடித்தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து பெங்களூரு விமான நிலையம் வாயிலாகச் சென்னை விமான நிலையம் வந்த அனுபமாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இவரது பயிற்சியாளர் எஸ்.ஏ. சலீம் மற்றும் அகடமியை சேர்ந்த அப்துல் ரகுமான் உள்ளிட்ட வீரர் வீராங்கனைகள் மற்றும் அனுபமாவின் தந்தை ராமச்சந்திரன், தாயார் காயத்ரி மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் பெருந்திரளாக வந்திருந்து வரவேற்பு அளித்தனர்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அனுபமா கூறுகையில், உலகத் தரமான வீரர்களை வீழ்த்தி வெற்றி பெற்றிருக்கிறோம் இது மகிழ்ச்சி அளிக்கிறது. அனைத்து போட்டிகளுமே மிகவும் கடுமையாக தான் இருந்தது. தொடர்ந்து பயிற்சிகள் மேற்கொண்டதன் மூலம் வெற்றி பெற்றுள்ளேன். தமிழக அரசு தொடர்ந்து எங்களுக்கு ஊக்கமும் உதவியும் அளிக்க வேண்டும். தமிழக அரசு எங்களுக்கு அரசு துறையில் வேலை வாய்ப்புகள் கொடுக்க வேண்டும்” என கூறினார்.
இதையும் படிங்க: "ஏலே பித்தாள.. பித்தாளன்னு கத்தினேன்.. பறந்துட்டான்..!" மூதாட்டியின் வீடியோ வைரல்!