சென்னை: 2024 நாடாளுமன்றத் தேர்தலை நோக்கி அனைத்து கட்சிகளும் கூட்டணி, தொகுதி ஒதுக்கீடு, பிரச்சார வியூகங்கள் என தங்களது பணிகளைத் தொடங்கிய நிலையில், அதிமுக மற்றும் பா.ஜ.க கூட்டணியை முறித்துக் கொண்டதால் அதிமுகவை நம்பி கூட்டணியில் தொடர்ந்த தமிழகத்தில் உள்ள சிறிய கட்சிகள் என அனைவருமே பா.ஜ.க-வின் ஒற்றை பதிலுக்காகக் காத்திருக்கின்றனர்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி அதிமுக - பா.ஜ.க கூட்டணி முறிந்து விட்டது எனவும், இது அனைத்து தொண்டர்களின் விருப்பத்திற்கேற்ப எடுக்கப்பட்ட முடிவு எனவும், இனி பா.ஜ.கவுடன் கூட்டணி என்கிற பேச்சுக்கே இடமில்லை என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில், ஏற்கனவே அதிமுகவில் மல்லுக்கட்டிக் கொண்டு நிற்கும் ஓ.பன்னீர்செல்வம், என்னோடு இப்போது வரையிலும் டெல்லியில் இருக்கும் பா.ஜ.க மேலிடப் பொறுப்பாளர்கள் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள், நானும் தொடர்பில்தான் உள்ளேன். அதனால் பா.ஜ.க தனது முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்த பிறகு தனது முடிவைத் தெரிவிப்பதாக அறிவித்துள்ளார்.
இதனால் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தருவதா அல்லது ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தருவதா என தமிழகத்தில் இருக்கும் சிறிய கட்சிகள் மதில் மேல் பூனை போல் எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஏனென்றால், இந்த கூட்டணி என்பது இத்தோடு முடிவடையப் போறதல்ல.
அடுத்த வரக்கூடிய சட்டமன்ற தேர்தலுக்கும் கூட்டணிக்கு அச்சாணியாக விளங்குவது இப்போது அமையும் கூட்டணிதான். இதனால்தான் ஓ.பன்னீர்செல்வமும் பா.ஜ.க-வின் கூட்டணி குறித்த அறிவிப்பிற்காகக் காத்திருக்கும் சூழலில் உள்ளார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நாடாளுமன்றத்தில் அதிமுகவின் வியூகம் என்ன? மற்ற சிறிய கட்சிகளின் எதிர்பார்ப்பு என்ன என்பது குறித்து அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி கூறுகையில், "சிறிய கட்சிகளுடைய எதிர்பார்ப்பு என்பது அதிமுக அணிகள் ஒன்றாக இருக்க வேண்டும். அதோடு கூடுதல் பலமாக கூட்டணியில் பா.ம.க, டிடிவி தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் என அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என எண்ணுகிறார்கள்.
மேலும், இந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கட்சியினுடைய எதிர்ப்பு வாக்குகளை மட்டும் நம்பி இருக்க முடியாது என அவர்களுக்கும் தெரியும். அதனால் ஆளும் கட்சிக்கு எதிர்ப்பு வாக்குகள் இருந்தாலும் கூட அவைகள் வெற்றி வாய்ப்புக்குப் பயன்படுமா என்றால் அது கேள்விக்குறிதான் எனவே அதிமுக மிகப்பெரிய அணியை உருவாக்க வேண்டும் என்பது தான் சிறிய கட்சிகளின் எண்ணம்.
இதற்கு முன்பு ஜெயலலிதா இருந்த போது இந்த சிறிய கட்சிகள் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணம் கூட்டணி என்பது மிக வலிமையான கூட்டணியாக இருந்தது அது போன்ற ஒரு கூட்டணியைத் தான் அதிமுகவின் அழைப்பிற்காகக் காத்திருக்கும் தமிழகத்தில் உள்ள சிறிய கட்சிகளின் எண்ணம். மேலும் இந்த கூட்டணி அடுத்து வரக்கூடிய சட்டமன்ற தேர்தலை எண்ணத்தில் வைத்துக்கொண்டு அமைக்க வேண்டிய சூழலும் உள்ளது" எனவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க:“திமுக குடும்பத்திற்கு கூட விடியல் இல்லை” - அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ