தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க பிறப்பித்த ஆணையைத் திரும்பப்பெற வேண்டும்' - வைகோ - முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்

சென்னை: உயர் கல்வி பயின்ற 5,000 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க தொடக்கக் கல்வித் துறை பிறப்பித்த ஆணையைத் திரும்பப் பெற வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.

ஐந்தாயிரம் ஆசிரியர்கள் மீது  நடவடிக்கை எடுக்க பிறப்பித்த ஆணையை தமிழ்நாடு திரும்பப்பெற  வேண்டும் !  -  வைகோ
ஐந்தாயிரம் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க பிறப்பித்த ஆணையை தமிழ்நாடு திரும்பப்பெற வேண்டும் ! - வைகோ

By

Published : Jul 30, 2020, 3:09 AM IST

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை உள்ளிட்ட பாடங்களைக் கற்பிப்பதற்காக, அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் 16,549 பகுதிநேர ஆசிரியர்களை தமிழ்நாடு அரசு 2011ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதியன்று வேலைவாய்ப்பக பதவி மூப்பு அடிப்படையில் நேர்காணல் மூலம் பணியமர்த்தியது

சொற்ப ஊதியத்திலேயே 9 ஆண்டுகள் பணிபுரிந்து 10ஆவது ஆண்டில் பணி தொடரும் பகுதி நேர ஆசிரியர்கள் ரூ.5 ஆயிரம் ஊதியம் பெற்றுவந்த நிலையில், 2014ஆம் ஆண்டு ரூ.2000, 2017ஆம் ஆண்டு ரூ.700 என மொத்தம் 9 ஆண்டுகளில் ரூ.2700 மட்டுமே ஊதிய உயர்வு பெற்றுள்ளனர்.

தமிழ்நாடு அரசில் பணிபுரியும் மற்ற தொகுப்பு ஊதியப் பணியாளர்களுக்கும், தின ஊதியப் பணியாளர்களுக்கும் வழங்கப்பட்டு வரும் போனஸ் போன்ற பணப் பயன்கள் எதுவுமே பகுதிநேர ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவது இல்லை.

வெறும் ரூ.7700 ஊதியம் பெற்றுக்கொண்டு கடந்த 9 ஆண்டு காலமாக நிரந்தர ஆசிரியர்கள் போன்று பணிச் சுமையை ஏற்றுக்கொண்டு கடமையாற்றும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் அதிகரித்து வழங்குவதுடன், பணி நிரந்தரம் செய்யவும் தமிழ்நாடு அரசு முன்வரவேண்டும்.

தமிழ்நாடு அரசு தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் நிரந்தர ஆசிரியர்கள், உயர் கல்வி கற்பதற்கு கல்வித்துறையின் அனுமதி வேண்டி விண்ணப்பித்து காத்திருந்தனர். ஆனால், பள்ளிக்கல்வித் துறை அலுவலர்கள் ஆசிரியர்களின் இக்கோரிக்கை குறித்து முடிவு எடுக்காததால், தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் உயர் கல்வி கற்க முனைந்தனர்.

இவ்வாறு உயர் கல்வி பயின்ற ஐந்தாயிரம் ஆசிரியர்கள் விதிமுறைகளை மீறினார்கள் என்று நடவடிக்கை எடுக்க தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டிருக்கிறது. ஆசிரியர் சமூகத்தை மனஉளைச்சலுக்கு உள்ளாக்கும் விதத்தில் தொடக்கக் கல்வித் துறை பிறப்பித்த ஆணையைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.

முதுநிலைப் பட்டதாரிகளான பகுதிநேர ஆசிரியர்களை வறுமையின் பிடியில் தள்ளுவது கொடுமையாகும். கடந்த 9 ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வரும் மே மாத ஊதியத்தை கணக்கிட்டு, பகுதிநேர ஆசிரியர்களுக்கு வழங்குவதுடன், அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details