முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (நவ.21) தலைமைச்செயலகத்தில், மாவட்ட அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழுவின் (DISHA), மாநில அளவிலான இரண்டாவது ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
ஒன்றிய அரசின் பங்களிப்புடன் 15 துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் 41 திட்டங்களைக் கண்காணிக்க மாநில அளவில் வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு (DISHA குழு) ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்குழுவின் தலைவராக முதலமைச்சரும், துணைத் தலைவராக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரும் உள்ளனர்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில், ஒன்றிய அரசின் பங்களிப்புடன் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டங்களான நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி மேம்பாட்டுத்திட்டம், தேசிய நல்வாழ்வு குழுமம் (National Health Mission), ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம், தேசிய உணவு பாதுகாப்புச்சட்ட அமலாக்கம் மற்றும் பிரதம மந்திரி முன்னோடி கிராமத்திட்டம் ஆகியத் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.