சென்னை: இடைநிலை ஆசிரியர்கள் தங்களுக்கு "சம வேலைக்கு சம ஊதியம்" வேண்டும் என கடந்த 8 நாளாக உண்ணாவிரதப் போராட்டம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று (அக் 05) காலையில் ஆசிரியர்களை போலீசார் குண்டு கட்டாகக் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கைது சம்பவத்திற்குத் தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த ஒரு வாரக் காலத்திற்கும் மேலாக ஜனநாயக வழியில் தங்களது உரிமைகளை மீட்டெடுப்பதற்காகவும் தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதியினை தற்போது ஆளுகின்ற அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகவும் போராடி வரும் ஆசிரியர்களைக் கைது செய்ததற்குத் தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் கடும் கண்டனத்தினை தமிழ்நாடு அரசிற்குத் தெரிவித்துக் கொள்கிறது.
மேலும், எதிர்க்கட்சியாக இருந்தால் ஒரு நிலைப்பாடும் ஆளும் கட்சியாக இருந்தால் வேறொரு நிலைப்பாடும் எடுக்கும் ஆட்சியாளர்களை ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அடையாளப்படுத்தத் தயங்க மாட்டார்கள். அதற்கான எதிர்வினையாற்றவும் தயங்க மாட்டார்கள்.
தங்களது கோரிக்கைகளை ஆளுகின்ற ஆட்சியாளர்கள் கேட்காதபோது, அதனை வெல்வதற்காக ஈடுபடுவது என்பது இந்திய ஜனநாயகத்தில் அரசியலமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமையாகும். இதனை யார் தடுத்தாலும் அதனை எதிர்கொள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தயாராக உள்ளனர்.
அரசின் இந்த அராஜக கைது நடவடிக்கையினை வன்மையாகக் கண்டிப்பதோடு, இதே போன்ற நடவடிக்கைகள் தொடருமானால், தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் பிற தோழமை அமைப்புகளுடன் இணைந்து மாபெரும் கண்டன் இயக்கங்களை நடத்தும் என்பதனை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும், போராட்டக் களத்தில் கைது செய்யப்பட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் உறுதுணையாக எப்போதும் தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் இருக்கும் என்பதனையும் இதன் வாயிலாகத் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ்நாடு அரசு உடனடியாக கைது செய்யப்பட்ட ஆசிரியர்களை விடுதலை செய்து, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். என்று தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறது" என்று தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:டிபிஐ வளாகத்தில் போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் கைது; ஈபிஎஸ் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்!