சென்னை: 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களில், நடப்பு கல்வி ஆண்டில் நீண்ட நாட்கள் பள்ளிக்கு வராத மாணவர்களை கண்டறிந்து, டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் பொதுத் தேர்வு எழுதாமல் இருக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில், மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட மாநில இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார்.
மேலும், பள்ளிக்கு நீண்ட நாட்கள் வராத மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க, மாவட்ட ஆட்சித் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தி உள்ளார். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், "2023-24 ஆம் கல்வி ஆண்டில் இடையில் நின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்து 100% மாணவர்கள் கல்வி கற்பதை உறுதி செய்ய வேண்டும். ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை 100% மாணவர் சேர்க்கையை உறுதிப்படுத்துவதற்கு, பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள், கல்வியாளர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் இல்லம் தேடி கல்வியின் தன்னார்வலர்கள் ஆகியோருடன் இணைந்து பல்வேறு செயல்பாடுகளை ஆண்டு முழுவதும் செய்து வருகிறது.
பள்ளி செல்லாத மற்றும் இடை நின்ற குழந்தைகளுக்கான கணக்கெடுப்பின்போது அனைத்து தரவுகளும் மொபைல் ஆப் மூலம் பதிவு செய்யப்படுகிறது. அதனடிப்படையில் மாணவர்கள் இடையில் நின்ற காரணங்களை கண்டறிந்து பள்ளியில் சேர்க்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் இடம், பொருளாதார சூழல், குடும்ப சூழல் போன்ற பல காரணங்களால் பள்ளிக்கு செல்ல இயலாத குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்பட வேண்டும்.
பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்கள், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் போன்றோரை பள்ளியில் மீண்டும் சேர்க்கத் தேவையில்லை. அதேபோல், ஐடிஐ பாலிடெக்னிக் போன்றவற்றில் சேர்ந்து இருக்கும் குழந்தைகள், வேறு மாநிலங்களுக்கு அல்லது நாடுகளுக்கு இடம் பெயர்ந்தவர்கள் போன்றவர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, அந்த விவரங்கள் உண்மை என்னும் பட்சத்தில் அவர்களை பள்ளியில் மீண்டும் சேர்க்கத் தேவையில்லாத மாணவர்கள் என்கிற பிரிவில் பதிவு செய்ய வேண்டும்.
அவ்வாறு இல்லை என்றால் அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க வேண்டிய மாணவர்கள் என்கிற பிரிவில் பதிவு செய்ய வேண்டும். மேலும், ஐடிஐ பாலிடெக்னிக் படிப்பில் சேர்ந்த மாணவர்களின் விபரங்களை தொழில்நுட்ப கல்வி இயக்ககத்துடனும் தொடர்பு கொண்டு அதனை உறுதி செய்ய வேண்டும். நீண்ட நாட்கள் பள்ளிக்கு வராத குழந்தைகளை கண்டறிந்து அவர்கள் மீண்டும் பள்ளிக்கு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.