தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 27, 2023, 10:13 AM IST

ETV Bharat / state

TN School Teachers: அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு!

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பணியிட மாறுதல் பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

Tamil Nadu Education Board
Tamil Nadu Education Board

சென்னை:அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் பணியிட மாறுதல் குறித்த கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் பெறுவதற்குரிய பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் தேதி மற்றும் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் ஏப்ரல் 27ஆம் தேதி முதல் மே 1 ஆம் தேதி வரை பள்ளிக் கல்வித்துறையின் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் காலிப் பணியிடம் மற்றும் ஆசிரியர்களுக்கு உரிய முன்னுரிமை பட்டியல் மே 5 ஆம் தேதி வெளியிடப்பட்டு அட்டவணைப்படி கலந்தாய்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது மாறுதல் கலந்தாய்வு குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் மற்றும் தொடக்க கல்வித்துறை இயக்குநர் அறிக்கை வெளியிட்டு உள்ளனர். அதன்படி, 2022-23 ஆம் கல்வி ஆண்டில் பொது மாறுதல் கோரி விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் தற்போது பணிபுரியும் பள்ளியில் ஓராண்டு பணி முடித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை கடைபிடிக்க தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வினை கல்வி தகவல் மேலாண்மை ஆன்லைன் இணையதளத்தின் மூலம் நடத்தப்பட உள்ளது. ஆசிரியர்களின் விண்ணப்பத்தை ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆசிரியர்கள் விண்ணப்பிக்கும் பொழுது தங்களின் விபரங்களை சரிபார்த்த பின்னர் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களின் ஒப்புதலும் பெற வேண்டும். பணியிட மாறுதல் வேண்டி விண்ணப்பிக்கும் பொழுது முன்னுரிமை கேட்டு விண்ணப்பித்தால் அதற்கான உரிய அலுவலரால் அளிக்கப்பட்ட ஆதாரத்தை இணையதளத்தில் பதிவேற்றம் செய்திடல் வேண்டும்.

தற்போது பணி புரியும் பள்ளியில் மாறுதல் பெற்றதற்கான உத்தரவு நகலையும் இணைக்க வேண்டும். மே மாதம் 31ஆம் தேதி பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில் பட்டியலை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர்கள் பதிவேற்றம் செய்திட வேண்டும். ஆசிரியர்கள் இல்லாமல் உபரியாக உள்ள காலி பணியிடத்தை காண்பிக்க கூடாது.

முதுகலை ஆசிரியர்கள் தாங்கள் எந்த பாடத்தினை முதன்மையாக படித்து மாணவர்களுக்கு கற்பிக்கிறார்களோ அதனை பதிவு செய்ய வேண்டும். கணவன் மற்றும் மனைவி முன்னுரிமையில் கேட்டு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் அவரவர் பணிபுரியும் அலுவலகம், பள்ளி, அரசு மற்றும் அரசு துறையில் நிர்வாகத்தின் கீழ் உள்ளதா என்ற விபரத்தினையும் அதற்கான உரிய அலுவலரிடம் பெறப்பட்ட சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

கணவன், மனைவி பணிபுரியும் இடத்திற்கான தொலைவு 30 கிலோமீட்டருக்கு மேல் உள்ளதை சரிபார்த்து உறுதி செய்யப்பட வேண்டும். மாறுதல் கலந்தாய்விற்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் அவர்களுக்குரிய கலந்தாய்வு சுழற்சி வரும் போது இருக்கும் காலி பணியிடத்திற்கு மட்டுமே ஒருமுறை அனுமதிக்கப்படுவார்கள். பின்னர் ஏற்படும் காலிப் பணியிடத்தை தேர்வு செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

கலந்தாய்விற்கு வருகை புரியாமலோ அல்லது காலதாமதமாக வந்தாலோ கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள். பணியிட மாறுதல் விண்ணப்பத்தில் தவறு இருந்து கண்டறியப்பட்டால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கலந்தாய்விற்கு தேவையான முன்னேற்பாடுகளை மாவட்ட கல்வி அதிகாரிகள் செய்திருக்க வேண்டும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு மே 8-ம் தேதி தொடங்கி 31 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஜூன் மாதம் 1ஆம் தேதி பள்ளி திறக்கும் பொழுது பணியிட மாற்றம் பெற்ற ஆசிரியர்கள் புதிய பணியிடத்தில் பணி புரிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தொடக்கக் கல்வித் துறையில் மே 8 ஆம் தேதி சுழற்சி கலந்தாய்வும், 9 ஆம் தேதி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வும், தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வும் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மே 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் கடந்த ஆண்டுகளில் பணி நிறைவு செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களை மீண்டும் அதே ஒன்றியத்தில் பணி அமர்த்துவதற்கான கலந்தாய்வு நடைபெறுகின்றன. மே 12 ஆம் தேதி பட்டதாரி ஆசிரியர் ஒன்றியத்திற்கு பணி நிரவல் கலந்தாய்வும், மே 13 ஆம் தேதி பட்டதாரி ஆசிரியர்கள் தொடக்க கல்வி மாவட்டத்திற்குள் ஒன்றியம் விட்டு ஒன்றியத்திற்கு பணி நிரவல் கலந்தாய்வும் நடைபெறுகிறது.

மே 15 ஆம் தேதி வருவாய் மாவட்டத்திற்குள் பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் கலந்தாய்வும் மே 16ஆம் தேதி இடைநிலை ஆசிரியர்களுக்கான ஒன்றியத்திற்குள் உள்ள பணியிடங்களுக்கான கலந்தாய்வு நடத்தப்படுகின்றது. மே 18ஆம் தேதி தொடக்கக் கல்வி மாவட்டத்திற்குள் உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒன்றியம் விட்டு ஒன்றியத்திற்குரிய கலந்தாய்வு நடத்தப்படுகின்றன.

அதேபோல் மே 18ஆம் தேதி இடைநிலை ஆசிரியர்கள் வருவாய் மாவட்டத்திற்குள் பணி நிரவல் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. மே 19ஆம் தேதி பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய் ஒன்றியத்திற்குள்ளும் நடத்தப்படுகின்றன. மே 20 ஆம் தேதி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு அன்றே தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இதேபோல் பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் முதுகலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்கள் ஆகியோருக்கான பணியிட மாறுதல் நடைபெறும் தேதிக்கான கலந்தாய்வு அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க :ஃப்ரீ பையர் விளையாட்டு மோகம்.. சென்னை சிறுவன் செய்த விபரீத செயல்!

ABOUT THE AUTHOR

...view details