சென்னை: தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற பேரவை கூட்டத்தில், பதிலளித்துப் பேசிய நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், “தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை 4.1 சதவிகிதத்திலிருந்து 3.8 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 7 ஆண்டுகளிலிருந்ததை விடத் தமிழ்நாட்டின் கடன் பெறும் அளவை, முற்றிலும் குறைத்து முழு அளவில் கடன் பெறாமல் உள்ளோம். இதன் மூலம் மாநிலத்தின் கடன் வாங்கும் திறனை அதிகரித்துள்ளோம்.
தமிழ்நாடு அரசின் வருவாய் பற்றாக்குறையைக் குறைக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் அரசு செலுத்த வேண்டிய கடனுக்கான வட்டியில் ரூ.1,240 கோடி குறைத்துள்ளோம். இது அனைத்தும் முதலமைச்சர் எனக்குக் கொடுத்த ஊக்கமே காரணம். வரும் காலத்தில் உலகப் பொருளாதார சரிவு ஏற்படாமல் இருந்தால், தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் உற்பத்தி சதவீதம் அதிகரித்துக் கொண்டே போகும், பற்றாக்குறை உற்பத்தி சதவீதம் குறைந்து கொண்டே போகும்.