சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நடைபெற்ற உடல் உறுப்பு தான தின நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் பங்கேற்று, டிரான்ஸ்டான் ஆண்டு அறிக்கையினை வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் விஜயபாஸ்கர் கூறியதாவது," மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, இந்தியாவிலேயே முதன் முதலாக உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையம் (TRANSTAN) என்ற முன்னோடி அமைப்பு, கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 12 இல் உருவாக்கப்பட்டது. மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகளை தானம் அளிப்பதன் மூலம் 8 நபர்களுக்கு வாழ்வளிக்க முடியும்.
தமிழ்நாட்டில் இதுவரை 1, 382 கொடையாளர்களிடமிருந்து 8,163 உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளது. உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தொடர்ந்து 5 முறையாக தமிழ்நாடு முதலிடம் வகித்து மத்திய அரசின் விருதுகளை பெற்றுள்ளது. ஏழை எளிய மக்களுக்கு கட்டணமில்லாமல் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
அதிகபட்சமாக 25 லட்சம் ரூபாய் வரை முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. மேலும்,
உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்களுக்குத் தேவைப்படும் உயரிய நோய் எதிர்ப்பு தடுப்பு மருந்துகள் (Immuno Suppressants) எவ்வித கட்டணமும் இல்லாமல் வழங்கப்படுகிறது.
உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை கல்லூரி மாணவ, மாணவிகளிடம் ஏற்படுத்தும் நோக்கத்தில் ஜேப்பியார் கல்லூரியில் உடல் உறுப்பு தானம் குறித்த தொடர் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன. இதில் 3,005-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை பொது மக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உடலுறுப்பு தானம் விழிப்புணர்வு மாரத்தான் (Marathon) நடைபெற்றது.