தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எண்ணூர் கச்சா எண்ணெய் கழிவு; தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சிபிசிஎல் நிறுவனத்துக்கு வழங்கிய வழிகாட்டுதல்கள் என்ன? - சென்னை செய்திகள்

TNPCB: எண்ணூர் பக்கிங்காம் கால்வாயில் எண்ணெய் கலந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL) இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரைத்துள்ளது.

Ennore oil spill
எண்ணூா் எண்ணெய் கசிவு

By ANI

Published : Dec 12, 2023, 8:36 AM IST

சென்னை:சென்னை எண்ணூர் பக்கிங்காம் கால்வாயில் கச்சா எண்ணெய் கலந்து கடல் வரை பரவியதற்கு எண்ணூரில் உள்ள சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL) நிறுவனம்தான் காரணம் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, சிபிசிஎல் நிறுவனத்திற்கு மாசுக் கட்டுப்பாடு வாரியம் சில வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

  • அதன்படி, பக்கிங்காம் கால்வாயில் உள்ள எண்ணெய் கசிவுகளை சுத்தப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
  • சிபிசிஎல் நிறுவனத்தில் உள்ள அனைத்து குழாய்கள் மற்றும் தொட்டிகளில் எந்த ஒரு கசிவும் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் முறையான வழிகாட்டு நெறிமுறைகளின்படி வெளியேற்ற வேண்டும்.
  • விதிமுறைகளை மீறி வெளியேற்றினால், மாசு கட்டுப்பாடு சட்டம் 1974-இன் கீழ் மாசுக் கட்டுப்பாடுச் சட்டம் தொழிற்சாலையின் செயல்பாடுகள் முடக்கப்படும்.
  • சிபிசிஎல் தொழிற்சாலையால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் சேதங்களுக்குப் பொறுப்பேற்பதுடன், அதற்கான இழப்பீடுகளையும் நிறுவனம்தான் வழங்க வேண்டும்.
  • பக்கிங்காம் கால்வாயில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சிபிசிஎல் நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும்.
  • வரும் காலங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

எண்ணூர் எண்ணெய் கசிவு :மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை எண்ணூர் பகுதியில் மர்மமான முறையில் எண்ணெய் கசிவு ஏறப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அங்குள்ள குடியிருப்பு சுவர்களில் எண்ணெய் படிந்தது.

மேலும் மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் எண்ணூர் முகத்துவாரப் பகுதியில் மற்றும் கடல் நீர் பரப்பில் எண்ணெய் படலம் பரவியதால், மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு தாமாக முன் வந்து வழக்குப் பதிவு செய்தது. இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்ய வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையில் 9 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை அமைத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்திய கடற்படை ஹெலிகாப்டர் மூலம் நடத்திய ஆய்வில், எண்ணூரை ஒட்டிய கடல் பகுதியில் சுமார் 20 ச.கி.மீ பரப்பளவுக்கு எண்ணெய் கழிவுகள் கலந்திருப்பதைக் கண்டுபிடித்தது. இது இந்த விவகாரம் தொடர்பான தீவிரத் தன்மையை மேலும் அதிகரித்திருக்கிறது. இந்நிலையில், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சிபிசிஎல் நிறுவனத்திற்கு பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

இதையும் படிங்க:"மழை பாதிப்பிற்கு பிறகு பள்ளி கட்டடங்கள் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது”- அமைச்சர் அன்பில் மகேஷ்

ABOUT THE AUTHOR

...view details