ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி, முருகன், சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய ஆறு பேரையும் விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: "மக்களாட்சிக் கோட்பாட்டிற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க அணிந்துரையாக 6 பேர் விடுதலைக்கான தீர்ப்பு அமைந்திருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் தீர்மானங்களை, முடிவுகளை நியமனப் பதவிகளில் இருக்கும் ஆளுநர்கள் கிடப்பில் போடக்கூடாது என்பதற்கு உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பும் ஆதாரம்" என முதலமைச்சர் ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவர் ராமதாஸ் ”ராஜிவ் கொலை வழக்கில் தண்டனைக் காலத்தை நிறைவு செய்த பிறகும் சிறை தண்டனை அனுபவித்து வந்த நளினி, முருகன், ரவிச்சந்திரன், சாந்தன், இராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இந்தத் தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது”
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி: “தமிழ்நாடு ஆளுநர் ரவியின் நிலைப் பாட்டிற்கு விரோதமாக பேரறிவாளன் விடுதலை, நளினி, முருகன், சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய ஆறு பேருக்கும் பொருந்தும் என்று கூறி, உச்சநீதிமன்றம் விடுதலை செய் துள்ளதை வரவேற்கிறோம். ஏற்கெனவே தந்த தீர்ப்பையொட்டி, உச்சநீதிமன்றம் இதனைத் தந்துள்ளது. தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஏற்காமல் ஆளுநர் முட்டுக்கட்டை போட்டது -சட்டப் பிழை என்பதற்கான சான்றே இந்தத் தீர்ப்பு! உச்சநீதிமன்றத்தின் இந்த இரண்டு ‘குட்டு’கள் போன்ற நடவடிக்கைக்குப் பிறகாவது தமிழ்நாடு ஆளுநர், பதவி விலகுவாரா? என்பதுதான் இப் போதுள்ள மில்லியன் டாலர் கேள்வியாகும்! இனியாவது அரசமைப்புச் சட்டக் கடமையிலிருந்து (161 ஆவது பிரிவின்படி) தவறாமல் ஆளுநர்கள் நடக்கவேண்டும்”
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ:ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக இருந்து வரும் நளினி, முருகன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், சாந்தன் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் அளித்துள்ளத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது ஆகும். உச்சநீதிமன்றம் தனது தனிப்பட்ட அதிகாரமான சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்தது போலவே, சிறையில் இந்த 6 பேரின் நன்னடத்தையைக் கருத்தில் கொண்டு, உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர் கவாய் தலைமையிலான அமர்வு விடுதலை செய்து தீர்ப்பளித்து இருக்கிறது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்: "முன்னாள் பாரதப் பிரதமர் திரு.ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட திரு.பேரறிவாளனை தொடர்ந்து, சுரேந்திர ராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன், ராபர்ட்பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், நளினி ஆகிய 6 பேரையும் இன்று உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது மகிழ்ச்சிக்குரிய செய்தி. இதன்மூலம் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நோக்கம் நிறைவேறியிருக்கிறது. இது அஇஅதிமுக இயக்கத்தின் தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி. இதனை அஇஅதிமுக சார்பில் வரவேற்கிறேன்"
ஜி.கே.வாசன் எதிர்ப்பு: ”முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தி மரணத்தை மறக்கவும் முடியாது,மன்னிக்கவும் முடியாது என்பதே இன்றுவரை உள்ளது. கொலை நடந்த போது இறந்தவர்களின் குடும்பங்களுக்கு,அதிர்ச்சியான தீர்ப்பாக அமைந்திருக்கிறது.”