சென்னை: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நஞ்சப்பசத்திரம் பகுதியில், கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி இந்திய ராணுவத்தின் MI-17VS ரக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 14 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக, குன்னூர் போலீசார் சந்தேக மரணம் 174 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் அச்சம்பவம் நடைபெற்று இரண்டு ஆண்டுகளை கடந்து உள்ள நிலையில், வழக்கின் விசாரணையை கைவிடுவதாக தமிழ்நாடு போலீஸ் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் முறையான ஹெலிகாப்டர் டேட்டா ரெக்கார்டர், காக் பிட் வாய்ஸ் ரெக்கார்டர் உள்ளிட்ட முக்கிய ஆதாரங்கள் எதுவும் கிடைக்காததால் குன்னூர் காவல் நிலைய போலீசார், இந்த வழக்கை நிலுவையில் வைத்தனர். மேலும் சூலூர் ராணுவ விமான தள அதிகாரிகள் இது குறித்த தகவல்கள் அனைத்தும் பாதுகாப்பு ரகசியங்கள் பிரிவின் கீழ் இருப்பதாக கூறி முழுமையான தகவலை பகிர முடியாது என்ன தெரிவித்ததாக காவல்துறை வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டது.