சென்னை:சென்னை மாநகர காவல் துறையில் நிர்பயா நிதித் திட்டத்தின் கீழ் 182 கோடி ரூபாய் மதிப்பில் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து 5 ஆயிரம் கேமராக்கள் மூலம் நகரத்தை கண்காணிக்கும் வசதியை கடந்த வாரம் சென்னை மாநகர காவல் ஆணையர் தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில், புவியியல் தகவல் தொழில்நுட்ப வரைபடம் (geographical information system) என கூறப்படும் கிரைம் மேப்பிங் வசதியை நேற்று (ஜூன் 27) சென்னை காவல் ஆணையர் தொடங்கி வைத்தார். இதன் மூலம் சென்னை மாநகர காவல் துறையினரின் கட்டுப்பாட்டு பகுதிகளில், கடந்த ஏழு ஆண்டுகளில் நடைபெற்ற குற்றச் சம்பவங்கள் 12 காவல் மாவட்டங்கள் வாரியாக தொகுக்கப்பட்டு மேப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கொலை குற்றங்கள் கடந்த 2017ஆம் ஆண்டு 95, 2018 - 111, 2019 - 109, 2020 - 94, 2021 - 104, 2022 - 101 மற்றும் நடப்பு ஆண்டில் 26 என நடைபெற்றுள்ளதாகவும், அதுவும் ஞாயிற்றுக்கிழமை 123, திங்கள்கிழமை 114 ஆகிய கிழமைகளில் அதிகமாக நடைபெறுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே போன்று செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு போன்ற சொத்து பறிப்பு குற்றங்கள் கடந்த 2017ஆம் ஆண்டு 3 ஆயிரத்து 697, 2021ஆம் ஆண்டு 3 ஆயிரத்து 982, 2022ஆம் ஆண்டு 4 ஆயிரத்து 197 மற்றும் நடப்பு ஆண்டில் இதுவரை ஆயிரத்து 707 வழக்குகள் பதியப்பட்டு இருப்பதாகவும், அதிகாலை மற்றும் இரவு 8 முதல் 10 மணியளவில் அதிகமாக நடந்துள்ளதாகவும், மேலும் திங்கள் மற்றும் புதன்கிழமைகளில் அதிக பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரம், மனித உடலை பாதிக்கும் குற்றங்கள் 2020ஆம் ஆண்டு ஆயிரத்து 784, 2021ஆம் ஆண்டு ஆயிரத்து 926, 2022ஆம் ஆண்டு 2 ஆயிரத்து 566, 2023ஆம் ஆண்டு ஆயிரத்து 6 சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகவும், திங்கள்கிழமை அன்று மாலை நேரங்களில் சம்பவம் நடைபெறுவதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.