சென்னை: போலீஸ் என்கிற ஸ்டிக்கரை ஒட்டிக் கொண்டு விதிகளை மீறுவது, சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதால், காவல் துறையினர் தனிப்பட்ட இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என காவல்துறை எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் காவல்துறையினர் தங்களது தனிப்பட்ட வாகனங்களில் போலீஸ் ஸ்டிக்கர்களை ஒட்டிக் கொள்வதால், அவர்களது உறவினர்கள் வாகனங்களை ஓட்டிச் சென்று விதிமுறைகளை மீறுவது, சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவது போன்ற சம்பவங்கள் சமீப காலங்களில் அதிகரித்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.
அதேபோல, போலீஸ் எனும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வரும் வாகனங்களை போக்குவரத்து காவல் துறையினர் சோதனை செய்ய தயக்கப்படுகின்றனர். இதனால், தமிழக காவல் துறையின் சட்டம் ஒழுங்கு கூடுதல் ஏடிஜிபி அருண், அனைத்து மாநகர காவல் ஆனையர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் அனைத்து மண்டல காவல் ஆய்வாளர்களுக்கு அதிரடி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ள தனிப்பட்ட வாகனங்களின் மீது, மோட்டார் வாகனச் சட்டத்தின்படி உரிய கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ள இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை தேசவிரோதிகள், குற்றவாளிகள் மற்றும் ரவுடிகள் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதால், குற்றச் செயல்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது என குறிப்பிட்டுள்ள அவர், தனிப்பட்ட வாகனங்களில் போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தால், உரிய சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், காவல்துறையினரின் தனிப்பட்ட வாகனங்களில் போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டப்படாமல் இருப்பதை அனைத்து பிரிவு அதிகாரிகளும் உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான விதிமீறல்கள் தீவிரமாக கண்காணிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேபோல் கடந்த ஆண்டு, முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், காவலர்களின் தனிப்பட்ட வாகனங்களின் கண்ணாடிகளில் கருப்பு ஸ்டிக்கர், போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது எனவும் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பிரபல தனியார் உணவக சாப்பாட்டில் கரப்பான் பூச்சி..! உணவை சாப்பிட்ட பெண்களுக்கு வாந்தி மயக்கம்! நடவடிக்கை என்ன?