சென்னை: ஷியாமல் சட்டர்ஜி என்பவர் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் Galaxy Solar Energy Pvt.Ltd., என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவரது நிறுவனத்தை விரிவாக்கம் செய்ய பணம் தேவைப்பட்ட நிலையில் தரகர்கள் மூலம் அறிமுகமான சென்னை, ஈஞ்சம்பாக்கம், சாய்பாபா காலனியில் இயங்கி வந்த East Coast Properties என்ற நிறுவனத்தை தொடர்புகொண்டுள்ளார்.
பின்னர், ஷியாமல் சட்டர்ஜிக்கு 100 கோடி லோன் தொகை 9.6% வட்டிக்கு, பாதுகாப்பு பத்திரம் இல்லாமல் தங்கள் நிறுவனத்தின் மூலம் கொடுப்பதாக நம்ப வைத்து அதற்கு 6 மாத வட்டியாக முன்தொகை ரூ.4 கோடியை கொடுக்க வேண்டும் என்று கூறி நம்ப வைத்துள்ளனர். மோசடி கும்பல் கூறியதை நம்பி East coast properties நிறுவனத்தின் வங்கி கணக்கிற்கு ரூ.3.50 கோடியை RTGS மூலமும், ரொக்கமாக ரூ.50 லட்சமும், மொத்தம் ரூ.4 கோடியை கொடுத்துள்ளார்.
ஆனால் ஷியாமல் ஷட்டர்ஜிக்கு எந்த விதமான கடன் தொகையை கொடுக்காமலும், வாங்கிய 4 கோடி பணத்தையும் திருப்பி கொடுக்காமலும் நிறுவனத்தை மூடிவிட்டு தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, கடன் வாங்கி தருவதாக மோசடி செய்த நிறுவனம் மற்றும் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுத்து இழந்த பணத்தை மீட்டு தருமாறு கடந்த மாதம் சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். அவர் கொடுத்த அந்த புகாரின் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவில் சார்பில் வழக்குபதிவு செய்யப்பட்டது.
மேலும், இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட தலைமறைவு குற்றவாளிகளை கண்டுப்பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு போலிசார் தேடி வந்தனர். இந்நிலையில் கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின்பேரில், ஆவணம் மோசடி தடுப்பு பிரிவு ஆய்வாளர் சுமதி தலைமையில், அமைக்கப்பட்ட தனிப்படையினர் மேற்படி முக்கிய குற்றவாளிகளான பன்னீர்செல்வம் (43), இம்தியாஷ் அகமது (எ) சத்தீஷ்குமார் (37) மற்றும் பவன்குமார் (எ) ரவி (எ) நியமத்துல்லா (45) ஆகியோரை கடந்த மார்ச் மாதம் 16 ஆம் தேதி சென்னையை அடுத்த கோவளத்தில் உள்ள சொகுசு விடுதியில் வைத்து கைது செய்தனர்.
விசாரணை செய்ததில், அவர்கள் லிங்க்டு இன் என்ற இணையதளம் மூலமாகவும், வட மாநிலங்களில் விளம்பரங்கள் செய்தும் வட மாநில தொழிலதிபதிபர்களை குறி வைத்து கடன் வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்தது விசாரணையில் அம்பலமானது. எந்தவித பிணை பத்திரங்களும் இல்லாமல், சொத்து பத்திரங்கள் இல்லாமல் கடன் தருவதாக விளம்பரம் செய்ததால் பல தொழிலதிபர்கள் இந்த கும்பலிடம் சிக்கியுள்ளது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.