பரத்பூர் (ராஜஸ்தான்):தேனி மாவட்டம், பெரியகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினருக்கு ஆபாசமாக வீடியோ அனுப்பி 10ஆயிரம் ரூபாய் பணம் பறித்த வழக்கில் ராஜஸ்தானில் தலைமறைவாக இருந்த நபரை தமிழக போலீசார் கைது செய்தனர்.
தேனி மாவட்டம், பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி திமுக எம்எல்ஏ சரவணக்குமாருக்கு கடந்த 1ஆம் தேதி வாட்ஸ்அப்பில் வீடியோ கால் வந்து உள்ளது. அந்த அழைப்பை அவர் எடுத்துப் பேசியபோது எதிரில் யாரும் இல்லாமல் சில வினாடிகளில் அந்த அழைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது. அதனைத் தொடர்ந்து மதியம் மீண்டும் எம்.எல்.ஏ-வின் வாட்ஸ்அப்பிற்கு ஒரு வீடியோவை, மர்ம கும்பல் அனுப்பியது.
அதில் முன்பு வந்த வீடியோ கால் அழைப்பிலிருந்த எம்எல்ஏ-வின் முகத்தை பதிவு செய்து, ஒரு பெண் நிர்வாணத்துடன் இருப்பது போலவும், தகாத முறையில் எம்எல்ஏ-விடம் பேசுவது போலவும் சித்தரிக்கப்பட்டிருந்தது. பின் சட்டமன்ற உறுப்பினரிடம் பணம் கேட்டு மிரட்டிய மர்ம கும்பல், பணம் கொடுக்காவிட்டால் இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியது.
இதனையடுத்து எம்எல்ஏ ஐந்தாயிரம் ரூபாய் பணத்தைக் கொடுத்துள்ளார். பின்னர் மீண்டும் கடந்த 8ஆம் தேதி, மர்ம கும்பல் காணொலியை வைத்து மிரட்டியதும் மேலும் ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்துள்ளார். தொடர்ந்து அந்த மர்ம கும்பல் பணம் பறிக்கும் நோக்கத்தில் செயல்பட்டு வந்ததால், இது குறித்து சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் தேனி சைபர் கிரைம் (cyber crime) காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.