சென்னை:தமிழ்நாட்டில் கஞ்சா, குட்கா மற்றும் போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க தமிழ்நாடு காவல்துறை கஞ்சா வேட்டை என்ற பெயரில் அதிரடி சோதனை நடத்தி போதைப் பொருட்களை பறிமுதல் செய்தும், கைது நடவடிக்கையில் மேற்கொண்டும் வருகின்றனர்.
மேலும் கடந்த 2 ஆண்டுகளில் 'கஞ்சா வேட்டை 3.0' வரை தமிழ்நாடு காவல்துறை நடத்திய வேட்டையில், 47,248 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, சுமார் 20,014 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது. அதில் மொத்தம் 25,721 நபர்கள் கைது செய்யப்பட்டு 5,723 நபர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த ஏப்.30 ஆம் தேதி முதல் கஞ்சா வேட்டை 4.0 தமிழ்நாடு காவல்துறை துவங்கி இருப்பதாகவும், அதன் மூலம் நேற்று குன்றத்தூரில் நடந்த சோதனையில் சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பிலான 22 டன் குட்காவுடன், அது தொடர்பாக 7 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் தப்பியோடிய குற்றவாளிகளை தனிப்படை அமைத்து தேடி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் கஞ்சா பதுக்கல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆணையர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கஞ்சா பதுக்கியவர் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் குறித்து 044 - 28447701 என்ற தொலைபேசி எண்ணிலும், tndgpcontrolroom@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாக பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் எனவும், தகவல் தெரிவிக்கும் நபர்களின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: மயிலாடுதுறையில் திருடு போன சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு!