இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவை பொறுத்தவரையில் ஏழாயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 242 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 643 பேர் குணமடைந்துள்ளனர். இதில், தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது.
ஏற்கனவே பிரதமர் மோடி முதலமைச்சர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். கடந்த 20ஆம் தேதியும், ஏப்ரல் 2ஆம் தேதியும் ஆலோசனை மேற்கொண்டார். இந்நிலையில், கரோனா தொற்று பரவலைத் தடுப்பது குறித்து பிரதமர் மோடி மாநில முதலமைச்சர்களுடன் மூன்றாவது முறையாக இன்று காலை காணொலி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.
இதில், தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி உட்பட பல்வேறு மாநில முதலமைச்சர்கள் கலந்துகொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார்.
ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமரிடம் முதலமைச்சர் பழனிசாமி வைத்த கோரிக்கைகள்:
- பி.சி.ஆர் மற்றும் விரைவான சோதனை கருவிகளை வழங்க வேண்டும்.
- பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ரயில்கள், லாரிகள் மூலம் தேவைப்படும் மாநிலங்களுக்கு அனுப்ப வேண்டும்.
- உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியில் 50 விழுக்காடு முன்கூட்டியே விடுவிக்க வேண்டும்.
- மாநிலங்களுக்கு இடையில் பயணிகள் போக்குவரத்தையும் தற்போது அனுமதிக்கக் கூடாது.
- ஊரடங்கு ஏப்ரல் 30 வரை நீட்டிக்க மாநில முதலமைச்சர்கள் விடுத்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
- கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு 1000 கோடி ரூபாய் தர வேண்டும்.
- மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ.1,000 கோடி உடனடியாக ஒதுக்க வேண்டும்.
- அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சர் பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
இதையும் படிங்க:’இயேசு போதித்த அன்பு வழியில் ஒற்றுமையுடன் வாழ வேண்டும்’ - முதலமைச்சர் ஈஸ்டர் வாழ்த்து