செங்கல்பட்டு: திரிபுரா மாநிலத்தில் இஸ்லாமியர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து தாம்பரத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் 500-க்கும் மேற்பட்டோர் சண்முகம் சாலையிலிருந்து பேரணியாக வந்து பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திரிபுராவில் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்களைக் கைது செய்யாத, மத்திய பாஜக அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுவர்கள் பதாகைகள் ஏந்தி கலந்து கொண்டனர்.
திரிபுரா மாநிலத்தில் இஸ்லாமியர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து தாம்பரத்தில் ஆர்ப்பாட்டம் இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில பொதுச்செயலாளரும், மணப்பாறை சட்டப்பேரவை உறுப்பினருமான அப்துல் சமது கலந்துகொண்டார்.
வன்முறையாளர்களை கண்டுகொள்ளாத பாஜக
செய்தியாளர்களிடம் பேசிய சட்டப்பேரவை உறுப்பினர் அப்துல் சமது, "கடந்த 21ஆம் தேதி வங்கதேசத்தில் நடந்த கலவரத்திற்கு பழிதீர்க்கும் விதமாக திரிபுராவில் இந்து அமைப்பினர் பேரணி நடத்தி கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். வழிபாட்டுத் தலங்கள், குரான்கள், வேத நூல்களை தீயில் கொளுத்தியுள்ளனர்.
இஸ்லாமியர்களின் வீடுகள், கடைகள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. இஸ்லாமியப் பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.
திரிபுராவில் ஆட்சி செய்யும் பாஜக அரசு வன்முறையில் ஈடுபட்டவர்களை ஒடுக்கவும், கைது செய்யவும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதை வன்மையாக கண்டிக்கிறோம்.
வன்முறையில் ஈடுபட்டவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். இடிக்கப்பட்ட மசூதிகள் மீண்டும் கட்டித்தர வேண்டும். இல்லையென்றால் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இந்திய வம்சாவளியை மரணதண்டனையில் இருந்து காப்பாற்றும் முயற்சி தீவிரம்!