சென்னை: பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் வன்புணர்வு செய்ததாகக் கூறப்படும் வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவின் மருமகன் சதீஷ் குமாரை சென்னை புளியந்தோப்பு மகளிர் போலீசார் கைது செய்து உள்ளனர்.
அமைச்சர் சேகர் பாபுவின் மகள் ஜெய கல்யாணிக்கும், சதீஷுக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் திருமணம் நடைபெற்றது. பெற்றோரின் எதிர்ப்பை மீறி ஜெய கல்யாணி, காதலர் சதீஷை கரம் பிடித்தார். திருமணம் முடிந்த கையோடு தம்பதி உடனடியாக பெங்களூரு சென்று காவல்துறை அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர்.
வீட்டை மீறி திருமணம் செய்துகொண்டதால் தனது தந்தையிடம் இருந்து பாதுகாப்புக்கோரி, ஜெய கல்யாணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி சதீஷ்குமாரை பல ஆண்டுகளாக காதலித்து வந்ததாக ஜெயகல்யாணி புகாரில் தெரிவித்து இருந்தார்.
இதனிடையே கடந்தாண்டு டிசம்பர் மாதம் வீடியோ ஒன்றை வெளியிட்ட ஜெய கல்யாணி, அதில் தந்தை சேகர் பாபுவால், தனது கணவர் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், அதனால் தலைமறைவாக இருந்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும் கணவருக்கு ஏதாவது நடைபெற்றால் தந்தை, தாய்மாமா, காவல் ஆய்வாளர் 3 பேரும் தான் காரணம் என வீடியோவில் கூறினார்.
இந்நிலையில், அமைச்சர் சேகர் பாபுவின் மருமகன் சதீஷை சென்னை புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து உள்ளனர். அதேநேரம் சதீஷ் மீது ஏற்கனவே கொலை மிரட்டல், ஆபாசமாக பேசுதல், வன்புணர்வு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.