சென்னை:கர்நாடகா - தமிழ்நாடு இடையே பல ஆண்டுகால போராட்டமாக, காவிரி நீரைப் பங்கிடுவதில் பிரச்னை இருந்து வருகிறது. நீரை முறையாக பங்கிட்டு தர நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கியும், அதற்கு உடன்படாத கர்நாடக அரசு, உச்ச நீதிமன்றத்தை நாடியது. தற்போது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் ஏற்காத அரசு, குறைவான அளவில் தமிழ்நாட்டிற்கு நீரை வழங்கி வருகிறது.
ஒவ்வொரு மாதமும் தமிழ்நாட்டிற்கு குறிப்பிட்ட அளவிலான டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும். ஆனால், தற்போது ஜூன் மாதம் வழங்கப்பட வேண்டிய 10 டிஎம்சி தண்ணீரில் 4 டிஎம்சி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. நீர் குறைப்பு போதாது என காவிரி குறுக்கே 9 ஆயிரம் ரூபாய் செலவில் மேகதாது அணையைக் கட்டி, தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் தண்ணீரின் அளவை முழுவதுமாக குறைத்து பாலைவனமாக மாற்றும் முயற்சியிலும் கர்நாடகா ஈடுபட்டு வருகிறது.
எனவே, இதனைக் கண்டித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், காவிரி மேலாண்மை வாரியத்தில் கர்நாடக அரசின் செயல் குறித்து புகார் தெரிவிக்கப் போவதாகவும், நியாயம் கேட்கப் போவதாகவும் டெல்லி சென்றார். அதனைத்தொடர்ந்து, நேற்று (ஜூலை 5) நள்ளிரவு டெல்லியில் இருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “பொதுவாக ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டிற்கு கர்நாடகா தர வேண்டிய தண்ணீரின் அளவு குறைந்து கொண்டே வருகிறது. ஒரு நாளைக்கு ஒரு டிஎம்சி தண்ணீர் நமக்கு வர வேண்டும். இந்த மாதம் மூன்றாம் தேதி வரையிலும் 12.213 டி.எம்.சி தண்ணீர் நமக்கு கிடைத்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் 2.993 டி.எம்.சி தண்ணீர்தான் கொடுத்துள்ளார்கள்.