தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'அனைத்து மொத்தச் சந்தைகளையும் திறக்க வேண்டும்' -  தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு

சென்னை: கோயம்பேடு சந்தை, திருச்சி காந்தி மார்க்கெட் உள்ளிட்ட அனைத்துச் சந்தைகளையும் உடனடியாக திறந்திட வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tamil Nadu Merchants Association demand to Open all wholesale markets including Coimbade
Tamil Nadu Merchants Association demand to Open all wholesale markets including Coimbade

By

Published : Jul 13, 2020, 4:59 PM IST

இது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்ரமராஜா, ”தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் குறிப்பாக சென்னை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் மொத்த காய்கறிக் கடைகள், மீன் மார்க்கெட் மொத்த இறைச்சிக் கடைகள், வணிக வளாகங்கள் முடக்கப்பட்டு இன்று 111 நாள்கள் நிறைவடைந்துவிட்டன.

டெல்லி, தெலங்கானா, ஹைதராபாத், பெங்களூரு, ஆந்திரா உள்ளிட்ட இதர மாநிலங்களிலுள்ள மொத்த மார்க்கெட்டுகளும் முடக்கிவைக்கப்படாமல் திறந்து வைக்கப்பட்டுள்ளன. எனவே கோயம்பேடு மார்க்கெட், திருச்சி மார்க்கெட் உள்ளிட்ட மார்க்கெட்டுகளையும் உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறந்துவிட வேண்டும்.

தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தியுள்ள கரோனா தடுப்பு விதிகளுக்குட்பட்டு தகுந்த இடைவெளி, முகக்கவசம் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளைப் பயன்படுத்தி பொதுமக்களுக்கு பொருள்களை விற்பனை செய்து அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படுகிறது.

திருமழிசை சந்தையில் காய்கறிகள் வாங்க போதிய வசதிகள் இல்லாததால் டன் கணக்கில் காய்கறிகள், பழங்கள் வீணாகிவருகின்றன. தற்போது மழையின் காரணமாக சந்தை முழுவதும் சுகாதாரமற்று காணப்படுகிறது. இதன்மூலம் கரோனா தொற்று அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, தமிழ்நாடு அரசு இதனைக் கவனத்தில் கொண்டு, சென்னை கோயம்பேடு சந்தை, திருச்சி காந்தி மார்க்கெட், வேலூர் நேதாஜி மார்க்கெட் உள்ளிட்ட பிற மாவட்டங்களில் முடக்கிவைக்கப்பட்டுள்ள அனைத்து காய்கறி, மளிகை, மீன், இறைச்சி மார்கெட்டுகளை உடனடியாக உரிய வழிகாட்டுதல்களுடன் பாதுகாப்புடனும் திறந்து செயல்படுத்த அனுமதியளிக்க வேண்டும்.

அரசு இதுகுறித்து உடனடியாக நல்ல முடிவுகளை எடுக்கவில்லை எனில், சங்க நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து விரைவில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து அறிவிக்கப்படும்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details