சென்னை: வாகன கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள், ஒன்றிய அரசின் விதிகளை மதிக்காமல், வாகன தவணை (E.M.I) பணத்தைக் கேட்டு, கொலை மிரட்டல் விடுப்பதாகத் தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர், டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் சங்கத்தின் தலைவர் யுவராஜ் பேசியதாவது,
டிஜிபி அலுவலகத்தில் புகார் “கரோனா காரணமாகத் தமிழ்நாட்டின் அனைத்து மோட்டார் வாகன நிதி நிறுவனங்களும், கடன்பெற்ற வாகன உரிமையாளர்களிடம் இருந்து, 6 மாதங்களுக்கான தவணையைப் பெறாமல், அந்த தொகையை தவணை முடிந்த பின்பு வாங்கிக் கொள்ளுமாறு ஒன்றிய அரசும், ரிசர்வ் வங்கியும் தெரிவித்தது.
இந்நிலையில் இந்த மாதத்திலிருந்தே வாகன தவணை தொகையைக் கட்ட வேண்டும் என நிதி நிறுவனங்கள் தொல்லை கொடுத்து வருகிறது. பணம் கொடுக்க தவறினால் சொத்துக்களைப் பறிமுதல் செய்வது, கொலை மிரட்டல் விடுப்பது, வாகனத்தைப் பறிமுதல் செய்வது, தற்கொலைக்குத் தூண்டுவது உள்ளிட்ட செயல்களில் நிதி நிறுவனங்கள் ஈடுபடுகின்றன.
இது குறித்து கேள்வி கேட்க நிதி நிறுவனத்திற்குச் சென்றால் அங்கு ஆலோசகராக ஓய்வுபெற்ற காவல் கண்காணிப்பாளர் (S.P), காவல் துணை கண்காணிப்பாளர்களை (D.S.P) வைத்து மிரட்டி வருகின்றனர்.
இதனைத் தடுக்கும் விதமாக மண்டல காவல்துறைத் தலைவர் (I.G) தலைமையிலான சிறப்பு அலுவலர்களை, காவல்துறைத் தலைவர் (D.G.P) நியமிக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம் இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க: இடஒதுக்கீடு தொடர்பான இஸ்லாமியர்களின் வழக்கு தள்ளுபடி