தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகளின்றி ஊரடங்கு நீட்டிப்பு

தமிழ்நாட்டில் ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பு
தமிழ்நாட்டில் ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பு

By

Published : Jul 30, 2021, 6:24 PM IST

Updated : Jul 30, 2021, 7:40 PM IST

18:20 July 30

தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகளின்றி ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறைக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

சென்னை: இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தற்போது தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு ஜூலை 31 அன்று காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், கரோனா நோய்த் தொற்று மாநிலத்தின் சில பகுதிகளில் சற்று அதிகரித்துவரும் சூழலில், நோய் தொற்று பரவலை கண்காணித்து தொடர்ந்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் இன்று (ஜூலை. 30) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் காணப்படும் நோய்த் தொற்று பரவல்; அண்டை மாநிலங்களில் நோயின் தாக்கம் மற்றும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் ஆகியவை குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. 

அதன் அடிப்படையில், ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் தவிர கூடுதலாக எவ்வித தளர்வுகளுமின்றி ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 9 காலை 6.00 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. 

கடந்த சில வாரங்களாக தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், நகரங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடுவதும் அதனால் நோய்த் தொற்று பரவல் அபாயம் ஏற்பட்டு வருவதும் விவாதிக்கப்பட்டது. 

மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கில் வழங்கப்பட்ட தளர்வுகள் சரியான முறையில் பின்பற்றப்படாவிட்டால் அதன் விளைவுகள் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும். 

எனவே, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையாக நடைமுறைப்படுத்த மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். மேலும், சில குறிப்பிட்ட பகுதிகளில் அதிக அளவில் கூட்டம் சேருவது தொடர்ந்து காணப்பட்டால் அப்பகுதி மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்கள், காவல் துறையினர் அப்பகுதியை மூடும் நடவடிக்கைகளை பொதுமக்கள் நலன் கருதி முடிவு செய்யலாம். 

  • அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து கடைகள், பொது மக்கள் கூடக்கூடிய இடங்களில் கீழ்க்கண்ட முக்கிய நிலையான வழிகாட்டு நடைமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.
  • கடைகளின் நுழைவு வாயிலில், வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் (hand sanitizer with dispenser) கட்டாயமாக வைக்கப்படுவதோடு, உடல் வெப்ப நிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும் (thermal screening).
  • கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை சம்மந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.
  • அனைத்து கடைகளும், உரிய காற்றோட்ட வசதியுடன் செயல்படுவதோடு, கடைகளில், தகந்த இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக்கூடாது.
  • கடைகளின் நுழைவு வாயிலில் பொது மக்கள் வரிசையில் காத்திருக்கும் போது, ஒரு நபருக்கும் மற்றொருவருக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்பட வேண்டும்.
  • மேற்படி விதிமுறைகளைப் பின்பற்றாமலும் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் வாடிக்கையாளர்களை அனுமதித்தும் செயல்படும் வணிக, இதர நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

நோய்த் தொற்று கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் 

நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களை கண்டறிதல், நோய்த் தொற்றுக்கு ஆளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல் மற்றும் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுதல் (Test-Track-Treat-Vaccination-Covid-19 Appropriate Behaviour) ஆகிய கோட்பாடுகளை கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும்.

கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்கு, நோய்த் தொற்று பாதிப்பிற்குள்ளானவர்கள் உள்ள பகுதிகளில், நோய்க் கட்டுப்பாட்டு மண்டல எல்லைகளை நுண்ணளவு வரை (Micro Level) வரையறை செய்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளின்படி, தீவிரமாக நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட  ஆட்சியர், உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும்.

நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்

  1. நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட வேண்டும். இந்த நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், மருத்துவ அவசர சேவைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குதல் தவிர,  இதர செயல்பாடுகள் அனுமதி இல்லை.
  2. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், தீவிரமாக நோய்த் தொற்று பரவலை, வீடு வீடாக கண்காணிக்க குழுக்கள் அமைத்து கண்காணிக்கப்படும்.
  3. அனுமதிக்கப்பட்ட பல்வேறு செயல்பாடுகளுக்கான நிலையான வழிகாட்டு நடைமுறைகள் தொடர்புடைய துறைகளால் கண்டிப்பாக அமல்படுத்தப்படுத்தப்பட வேண்டும்.

கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த, பொது மக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதையும், கூட்டம் கூடுவதையும் தவிர்க்க வேண்டும். மூன்றாம் அலை என்ற ஒன்று தமிழ்நாட்டில் ஏற்படவே முடியாத வகையில் நாம் ஒவ்வொருவரும் விழிப்புடன் இருக்கவேண்டும்.  வருமுன் காத்தலே விவேகம்; இது நாம் விழிப்புடன் இருக்க வேண்டிய நேரம். 

மேலும், கரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு,  கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்றவும், நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை, சிகிச்சை பெற வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க:குழந்தைகளை விளையாட அனுமதிங்க...பெற்றோருக்கு அமைச்சர் அட்வைஸ்

Last Updated : Jul 30, 2021, 7:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details