இதுகுறித்து வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கிருஷ்ணகிரி மாவட்டம் கூத்தனப்பாலை டாடா எலக்ட்ரானிக் நிறுவனத்தில் வேலைக்காக தனி தொடர் வண்டியில் ஜார்க்கண்ட்டிலிருந்து 860 பெண் தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
தமிழ்நாட்டுப் பெண்களை வேலையில் அமர்த்துவதை தவிர்ப்பதற்காகவே வெறும் 12ஆம் வகுப்புப் படித்த பெண்கள் மட்டுமே தங்களுக்கு வேண்டுமென டாடா நிறுவனத்தினர் வடமாநில பெண்களை பணி அமர்த்தியுள்ளனர். டாடா வெளிப்படையாகவே, 18 வயதிலிருந்து 21 வயது வரை உள்ள இளம்பெண்களே வேண்டும் என்றும், 12ஆம் வகுப்பிற்கு மேல் படித்திருக்கக் கூடாது என்றும் நிறுவனத்தினர் வேலைக்கு வடமாநில பெண்களை நியமித்திருப்பது சட்டப்படி தவறானதாகும்.
தமிழ்நாட்டை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் படித்துவிட்டு உரியப் படிப்புக்கேற்ற வேலையின்றி தவித்து வரும் நிலையில், தமிழ்நாட்டிலேயே செயல்படும் டாடா தனியார் நிறுவனம், தமிழர்களைப் புறக்கணித்துவிட்டு வெளி மாநிலங்களிலிருந்து வேலைக்கு இளம் பெண்களை சிறப்புத் தொடர்வண்டி வழியே அழைத்து வந்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது.