சென்னை கலைவாணர் அரங்கத்தில் இந்த ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் நேற்று (பிப்.02) தொடங்கியது. இதில் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். ஆளுநர் உரையாற்றத் தொடங்கிய நிலையில், எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். அமைதியான முறையில் நடத்த ஒத்துழைப்புத் தருமாறு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் எதிர்க்கட்சிகளை வலியுறுத்தினார்.
ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். மேலும் இந்தக் கூட்டத் தொடர் முழுவதையும் புறக்கணிப்பதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்தனர். தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் முதல் நாள் அன்றே ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவை கூட்டத்தொடர் முழுவதையும் எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பது இதுவே முதல்முறை என்று கருதப்படுகிறது.
உடல் நலக்குறைவு காரணமாக அமைச்சர் காமராஜ் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்கவில்லை. சசிகலா விடுதலையானதை முன்னிட்டு டிடிவி தினகரனும் சட்டப்பேரவை தொடரில் பங்கேற்கவில்லை.