சென்னை: 2023-24ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "2023 - 24ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மார்ச் 20ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில், காலை 10 மணிக்கு அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார்.
தொடர்ந்து அன்று பிற்பகல் சட்டப்பேரவையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் கூட்டப்பட்டு, நிதிநிலை அறிக்கை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்பட இருக்கிறது'' என்றார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் யாரை எங்கு உட்கார வைப்பது என்பது என்னுடைய முடிவு என சபாநாயகர் அப்பாவு ஏற்கனவே கூறியிருந்தார். இன்று ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இருக்கை சர்ச்சை தொடர்பான கேள்விக்கு, ''எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தில் ஏற்கனவே பேசி தீர்வு காணப்பட்டது. தற்போது அதில் எந்த வித குழப்பமும் இல்லை'' எனத் தெரிவித்தார்.