Tamil Nadu Latest News: மதிமுக சார்பில் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நாளை மாநாடு நடைபெற உள்ளது. இதுதொடர்பாக இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், இன்றைய தமிழ்நாடு அரசியல் சூழலில் திராவிட இயக்க லட்சியங்களுக்கு கேடுகள் செய்யும் மத்திய அரசும், அதைப்பின்பற்றி மாநில அரசும் செயல்பட்டு வருகின்ற வேளையில் அதை தடுக்கின்ற வகையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி அமைந்துள்ளது என்றார். நாளை நடைபெறவுள்ள மதிமுக மாநாட்டில் தன்னுடைய உரையின் தொடக்கம் காஷ்மீர் பிரச்னை பற்றிதான் இருக்கும் என்றும் அதனை தொடர்ந்து மாநாட்டில் மிக முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாகவும் கூறினார்.
பேனர் கலாச்சாரத்தை அன்றே மதிமுக எதிர்த்தது அதை இன்று வரை எதிர்த்து வருகிறது என்றும் இம்முறை மாநாட்டுக்காக யாருக்கும் இடையூறாக பேனர்கள் வைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
5ஆம் வகுப்பு மற்றும் 8ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு என்ற முடிவை வரவேற்பதாக கூறிய வைகோ, தேர்வு அவசியம் இல்லையென்றால் மாணவர்கள் தயாராக மாட்டார்கள், அதே நேரத்தில் அடுத்த வகுப்புக்கு போகவிடாமல் தடுக்கக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.