சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை குறித்த மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, "தமிழ்நாட்டில் சாதிச் சண்டைகள் இல்லை. மதச்சண்டைகள் இல்லை. கூட்டு வன்முறைகள் இல்லை. கலவரங்கள் இல்லை. துப்பாக்கிச் சூடு இல்லை. காவல் நிலைய மரணங்கள் இல்லை. இதெல்லாம் இல்லை என்பதற்கு அடையாளமாகத்தான் புதிய தொழிற்சாலைகள் வருகின்றன. புதிய முதலீடுகள் வருகின்றன. புதிய நிறுவனங்கள் வருகின்றன. அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி வருகிறது. ஆட்சிக்கு நல்ல பெயர் வருகிறது.“அமைதியான மாநிலம் தமிழ்நாடு” என்ற நற்பெயர் வருகிறது.
காவல்துறை நடவடிக்கை: ஒரு மாநிலம் வளருகிறது என்றால், அது அமைதியான மாநிலமாக இருக்கிறது என்று பொருள். சட்டம் ஒழுங்கைப் பேணி, பொதுமக்களிடம் அச்ச உணர்வைப் போக்கி இருக்கிறது நமது அரசு. எந்த விதக் குறுக்கீடும் இன்றி காவல் துறையை செயல்பட அனுமதித்துள்ளோம். இதனால்தான் சமூகவிரோதிகள், கொள்ளையர்கள், வன்முறையாளர்கள் உடனுக்குடன் கைது செய்யப்படுகிறார்கள். மாநில காவல் துறையினர் சட்டம்-ஒழுங்கை, தொடர்ந்து சிறப்பாகப் பராமரித்து வருவதோடு, குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் சாதி, சமய வெறியர்கள், சமூக விரோதிகள் மீது அரசு மேற்கொண்ட கடும் நடவடிக்கைகள் காரணமாக, சாதி, சமய பூசல்கள் ஏதுமின்றி மாநிலத்தில் அமைதி நிலவுகிறது. காவல்துறையினர், மாநிலம் முழுவதும், குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் ரவுடிகள் மற்றும் கொள்ளையர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுத்து கொலை, கொள்ளை மற்றும் சமுதாயக் குற்றங்களில் ஈடுபடுவோர் மீதும், ஆட்களை கடத்தி பணம் பறித்தல், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்கள் விற்பனை, மணல் மற்றும் ரேஷன் அரிசி கடத்துதல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபடுதல், அதிக வட்டி வசூலித்தல் போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீதும், கஞ்சா, நிதி நிறுவன மோசடி, சைபர் குற்றங்கள், சமூக வலைதளங்களில் வதந்திகளைப் பரப்புவோர் ஆகியோர் மீதும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து, அவர்கள் தடுப்பு காவலில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.
குற்றம் நடந்ததும் உடனடியாக நடவடிக்கை எடுப்பதால் குற்றங்கள் குறைந்துள்ளன. மிகப்பெரிய மோதல் ஒன்று அரசின் வேகமான நடவடிக்கைகளால் எப்படி தவிர்க்கப்பட்டது என்பதற்கு எடுத்துக்காட்டுதான், வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுகிறார்கள் என்று பரப்பப்பட்ட வதந்திகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள். இந்த விவகாரம் தொடர்பாக, இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தற்போது வரை மொத்தம் 88 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, 178 பேர் கைது செய்யப்பட்டார்கள்.
எடப்பாடி பழனிசாமிக்கு கேள்வி:மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கைப் பராமரிப்பதைப் பொறுத்தவரையில், போராடியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது யார் ஆட்சியில் என்பதையும், அதற்கு ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் தலைமையில் ஆணையம் அமைத்து, விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது எந்த ஆட்சியில் என்பதையும் தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். நேற்று இந்த அவையில் எதிர்க்கட்சித் தலைவர் பேசும்போது, ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டைப் பற்றி குறிப்பிட்டார். நான் ஒரே ஒரு கேள்வி மட்டும் எழுப்ப விரும்புகிறேன். அறையிலிருந்து அவர்கள் கேட்டுக் கொண்டிருப்பார்கள். எனவே, அந்த உரிமையோடு அவர்களை கேட்க விரும்புகிறேன். 100 நாட்கள் நடந்த அந்த போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டிற்கு உத்தரவிட்டது யார்? அதை மட்டும் எதிர்க்கட்சித் தலைவர் ஏன் சொல்லவே மாட்டேன் என்கிறார்.
முதலமைச்சராக இருந்த போதும் சொல்ல விரும்பவில்லை. இப்போது எதிர்க்கட்சித் தலைவர் ஆன பின்பும் அவர் சொல்ல விரும்பவில்லை. ஆனால், நமது அரசைப் பொறுத்தவரை, துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் பொதுமக்கள் ஒருவர் கூட உயிரிழக்காதவாறு சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட்டு வருகிறது. 12.07.2022 அன்று கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்ததையடுத்து நடந்த தாக்குதல் சம்பவத்தை காவல் துறையினர் திறமையாக கையாண்டதோடு உயிரிழப்பு ஏதும் இல்லாமல் பார்த்துக்கொண்டனரே, அதுவே ஒரு அரசு மக்கள் போராட்டத்தை எப்படி பொறுப்புடன் கையாள வேண்டும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு.
காவல் நிலைய மரணம் இல்லை: காவல் நிலைய மரணங்கள் ஏதும் நடைபெறவில்லை என்ற நிலையை அடைந்துள்ளோம். காவல்நிலைய மரணங்களை தடுப்பதைப் பொறுத்தவரையில், அதிலும் இந்த அரசு சாதனை படைத்துள்ளது. 2019-ஆம் ஆண்டு 11 காவல் நிலையங்களில் 11 நபர்கள் இறந்த நிலை மாற்றப்பட்டு, 2023-ஆம் ஆண்டு இதுநாள் வரையில், காவல்நிலைய மரணங்கள் ஏதும் நடைபெறவில்லை என்ற நிலையை அடைந்துள்ளோம். கடந்த ஆட்சியோடு ஒப்பிடும்போது தற்போதைய ஆட்சியில் காவல் நிலைய மரணங்கள் பெருமளவில் குறைந்து விட்டன. காவல் நிலைய மரணங்களே இல்லை என்ற நிலையை அடைவதற்கான வழிவகைகளில் இந்த அரசு நிச்சயம் ஈடுபடும்.
கோவை நகருக்கு பாதுகாப்பு: கடந்த 23.10.2022 அன்று கோயம்புத்தூர் உக்கடம் பகுதியில் நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டதோடு, சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டனர். மேலும், 26.10.2022 அன்று எனது தலைமையில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில், வழக்கில் மாநிலம் தாண்டிய பரிமாணங்களும், பன்னாட்டுத் தொடர்புகளும் இருக்க வாய்ப்பு இருந்ததால், இவ்வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றிட ஒன்றிய அரசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டது. மூன்றே நாளில், ஒரு மாநில அரசு இதுபோன்ற வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு மாற்றியது என்றால், அது தமிழ்நாடு அரசுதான். இந்தியாவிலேயே தமிழ்நாடு அரசுதான் இவ்வளவு விரைவாக வழக்கினை மாற்றியிருக்கும். மேலும், கோயம்புத்தூர் மாநகரின் பாதுகாப்பைக் கருதி கரும்புக்கடை, சுந்தராபுரம், கவுண்டம்பாளையம் ஆகிய இடங்களில் புதிய காவல் நிலையங்கள் அமைக்கவும், இத்தகைய சம்பவங்களைத் தடுக்க காவல் துறையில் சிறப்புப் படையை உருவாக்கவும், கோயம்புத்தூர் பகுதியில் முக்கிய இடங்களில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும் முடிவுகள் எடுக்கப்பட்டன.
அமைதிப்பூங்கா தமிழ்நாடு:தமிழ்நாடு காவல் துறை நுண்ணறிவுப் பிரிவின் ஒரு அங்கமாக விளங்கும் சிறப்புப் பிரிவின் நுண்ணறிவுத் தகவல்களின்படி விரைவாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் மூலம் மதரீதியான மோதல்கள் எதுவுமின்றி தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக திகழ்ந்து வருகிறது. தீவிரவாத அமைப்புகளின் மூளைச்சலவையில் இருந்து இளைஞர்ளைக் காக்க சமய அறிஞர்கள், உளவியல் நிபுணர்கள் மற்றும் பெற்றோர்கள் உதவியோடு ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, 2022-2023-ஆம் ஆண்டில் 20 இளைஞர்கள் நல்வழிப்படுத்தப்பட்டுள்ளனர்" என கூறினார்.
இதையும் படிங்க: மெரினாவில் பிறந்தநாள் கொண்டாட சென்ற இளைஞர் கொலை.. நடந்தது என்ன?